கோவை: கடந்த 1998ம் ஆண்டு கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த தையல் ராஜா கைது செய்யப்பட்டு, கோவைக்கு அழைத்து வரப்பட்டார்.
கோவை உக்கடம் பிலால் எஸ்டேட்டைச் சேர்ந்தவர் ராஜா (48) ஆல்-உம்மா அமைப்பின் தீவிர உறுப்பினராக இருந்தவர். 1998-ஆம் ஆண்டு கோவை தொடர் குண்டுவெடிப்பில் சம்பவத்தில் முக்கிய பங்கு வகித்தவர்
இதற்கு முன்பு தையல்காரராகவும், எம்பிராய்டரி வேலை செய்பவராகவும் பணியாற்றி வந்தார்.
கர்நாடகத்தில் இவரது நடமாட்டம் குறித்து கோவை காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், புதன்கிழமை அவர் கைது செய்யப்பட்டார்.
1996-ஆம் ஆண்டு நாகூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட, கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலைய மற்றும் மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் 1996-97 காலகட்டத்தில் மேலும் இரண்டு கொலை வழக்குகளில் ராஜா தொடர்புடையவர்.
1998-ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக, வள்ளல் நகரில் வாடகை வீடு எடுத்து, அங்கு குண்டுகள் தயாரிக்கப்பட்டு சேமிக்கப்பட்டதாகவும், பிப்ரவரி 12 முதல் 14 வரை ஆல்-உம்மா அமைப்பின் தொண்டர்களுக்கு குண்டுகளை விநியோகித்ததாகவும் காவல்துறை தெரிவித்து உள்ளது.
இதே வழக்கில் மற்றொரு முக்கிய குற்றவாளியான ஒப்பணக்கார தெருவைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மான், 1998 பிப்ரவரி முதல் தலைமறைவாக உள்ளார். ஆறாம் வகுப்பு வரை படித்த முஜிபுர் ரஹ்மான், ஆல்-உம்மாவின் மாநில செய்தித் தொடர்பாளராக இருந்தவர்.
கோவையில் அமைப்பின் தொண்டர்களைத் திரட்டுவதில் முக்கிய பங்கு வகித்த இவர், குண்டுகளை வைப்பதற்கு தள்ளுவண்டிகளை ஏற்பாடு செய்ததாகவும், 1998 பிப்ரவரி 14 அன்று ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் நடந்த பாஜக கூட்டத்தில் தற்கொலைப் படை உறுப்பினர்கள் நான்கு பேர் இருந்தபோது அங்கு இருந்ததாகவும் காவல்துறை தெரிவித்து உள்ளது.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி ஒருவர் 27 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு இருப்பது, இவ்வழக்கில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
கைது செய்யப்பட்ட டெய்லர் ராஜாவிடம் தற்பொழுது கோவை, அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் வளாகத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடைய கோவை மாநகரில் போலீசார் உசார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.