கோவை: கோவை குனியமுத்தூரில் மக்களை அச்சுறுத்திய முகமூடி கொள்ளையனை போலீசார் சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 30 கிராம் உருக்கிய தங்கம், ரூ.14 ஆயிரத்தை மீட்டனர்.
கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல்ராஜ் (75). இவரது வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றையும், சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்த சதீஸ் (30) என்பவர் கோவைப்புதூரில் நடத்தி வரும் மளிகை கடையில் ரூ.34 ஆயிரத்தையும் கடந்த 10ம் தேதி மங்கி குல்லா அணிந்த ஒரு முகமூடி கொள்ளையன் திருடி சென்றார்.
அதுமட்டுமில்லாமல் குனியமுத்தூர் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அந்த முகமூடி கொள்ளையனின் சிசிவிடி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.
இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்து வந்தனர். இதையடுத்து குனியமுத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி முகமூடி கொள்ளையனை தேடி வந்தனர். இதை தொடர்ந்து போலீசார் நேற்று முன்தினம் முகமூடி கொள்ளையனை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (36) என்பதும், தற்போது கோவை கணபதி சதுர்வேதி பகுதியில் தங்கிருந்து முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர் நகைகளை கொள்ளையடித்து உருக்கி வைத்திருந்த 30 கிராம் தங்கம் மற்றும் ரூ. 14 ஆயிரம் மீட்டனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
Comments are closed.