கோவை: சீமானின் இயல்பு என்ன என்று தான் திமுக மாணவரணி மாநில செயலாளர் ராஜீவ்காந்தி பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கல்விக்கே முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முயற்சிகளை, மாணவர்களிடம் எடுத்துச் செல்லும் விதமாக திராவிட முன்னேற்றக் கழக மாணவரணி முக்கிய பிரச்சாரத்தினை இன்று தொடங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில், ஓரணியில் தமிழ்நாடு என்ற கருப்பொருளில் விழிப்புணர்வு பிரச்சாரம் இவ்வாரம் முழுவதும் நடைபெறுகிறது. மாணவர்கள் பயிலும் கல்லூரி வாயில்களில் இந்த இயக்கம் செயல்படுத்தப்படுவதால், தமிழக அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் கல்வி துறையில் எடுத்த முக்கிய நடவடிக்கைகள் பற்றி மாணவர்களுக்கு நேரடியாக எடுத்துரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க மாணவர் அணி மாநில செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி பேசும்போது
பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தமிழ்நாட்டின் கல்வித் தரம் குறித்து பெருமிதம் கொள்கிறார்கள். ஒன்றிய அரசு பல்கலைக் கழக மானியக் குழுவின் வாயிலாக கல்வித் துறையை நெருக்கடிக்கு தள்ளிய நேரத்தில் கூட, இடை நிறுத்தம் இல்லாமல் கல்வித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என்றனர்.
மேலும், தவப்புதல்வன், காலை உணவு திட்டம், உரிமைப் பெண், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட பல முக்கிய திட்டங்கள் மூலம் முதல்வர் ஸ்டாலின் கல்வியை மக்களிடம் கொண்டு சென்று உள்ளார். இவை அனைத்தும் சமத்துவத்தை வலியுறுத்தும் திட்டங்கள். தமிழக பள்ளிகளில் சாதி குறித்த போதனை இல்லாமல், ஒருமித்த சமூகக் கோட்பாடுகள் மூலம் கல்வி அளிக்கப்படுகிறது என்றனர்.
கோவை மாவட்டத்தில் மட்டும் 800 – க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இந்த பிரச்சாரம் நடைபெற்று வருவதாகவும், மாணவர்கள் இடையே இதற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருவதாகவும் தெரிவித்தனர். மாணவர்களிடம் அரசியல் விழிப்புணர்வை விதைப்பது இந்த முயற்சியின் நோக்கமாகும் என்றும், திராவிட இயக்கம் கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை ஒரு வாரத்துக்குள் மாணவர்களிடம் எடுத்துரைப்போம் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.
சீமான் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,
மு.க.முத்து அவர்களின் மறைவுக்குப் பின்னர், சீமான் முதல்வர் இல்லத்திற்கு சென்றது சரியான செயல், மனிதாபிமானம் மிக்க செயல். ஆனால், தொடர்ந்து தரவுகள் இல்லாமல் பத்திரிகைகளில் உரையாடுவதை தவிர, அரசியல் ரீதியாக அவரிடம் எந்த ஆதாரங்களும் இல்லை என்பது எங்களின் நம்பிக்கை. அவர் நிலையான தத்துவம் இல்லாமல் சூழ்நிலைக்கேற்ப பேச்சை மாற்றும் பழக்கமுடையவர்.
உண்மை இல்லாத கருத்துக்களை ஊடகங்களில் பிரச்சாரம் செய்வது அவரது இயல்பாக இருக்கிறது.
கல்லூரிகளில் அனுமதியில்லாத நிலையில், கல்லூரி வாயில்களின் முன்பு திராவிட கழகம் மேற்கொண்டு உள்ள கல்வி சேவைகளை மாணவர்களுக்கு எடுத்து சொல்லிக் கொண்டு இருக்கிறோம்என தெரிவித்தார்.