கோவை: ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட பேரூர் படித்துறையில் மக்கள் குவிந்தனர்.
ஆடி அமாவாசை என்பது முன்னோர்களுக்கு படையலிட்டு வணங்குவதற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. வருடத்தில் முக்கியமான மூன்று அமாவாசைகளான ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய நாட்களில் திதி தர்ப்பணம் கொடுப்பது நல்ல பலனை தரும்.
கோவை, பேரூரில் உள்ள நொய்யல் ஆற்றங்கரையில் புரோகிதர்களை கொண்டு முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேரூர் பட்டீஸ்வரர் கோவில் படித்துறையில் நல்லறம் அறக்கட்டளை சார்பில் தர்ப்பண மண்டபம் கட்டப்பட்டது.
இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நொய்யல் ஆற்றங்கரையில் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.ஆற்றங்கரையில் ஓரத்தில் உள்ள புதிய தர்ப்பணம் மண்டபத்தில் தயார் நிலையில் இருந்த புரோகிதர்களை கொண்டு பக்தர்கள், முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
வாழை இலையில் தர்ப்பை புல், காய்கறி, அரிசி, எள், சாதம் உள்ளிட்டவற்றைகளை படைத்து பூஜை செய்தனர். பின்னர் அவற்றை எடுத்துச் சென்று ஆற்றில் போட்டு மூதாதையரை வணங்கினர். தொடர்ந்து இலையில் சூடம் ஏற்றி ஆற்றில் விட்டு வழிபட்டனர்.
அதன்பின் ஆற்றங்கரையில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகரையும், சப்த கன்னியரையும் வணங்கினர். அங்கு இருந்து பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் சுவாமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.