கோவை: பேரூர் பட்டீசுவரர் கோவிலுக்குள் இன்று முதல் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை பேரூர் பகுதியில் உள்ள பழைமை வாய்ந்த பிரசித்தி பெற்ற பட்டீசுவரர் கோவிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். கோவை மட்டுமல்லாமல் வெளி மாவட்டம் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடை மூடிய பிறகு எஸ்பி கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வந்த வீடியோ காட்சிகள் வெளியானதை தொடர்ந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. சிவனடியார்களும் இந்த அமைப்பை சேர்ந்தவர்களும் அரசு அதிகாரிகளிடம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில் கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆகம விதிகளை மீறி நடையை திறந்த புகாரில் வேல்முருகன், சாமிநாதன் ஆகிய இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
அதேசமயம் கோவில் நிர்வாகம் சார்பில் இன்று முதல் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. பக்தர்கள் எடுத்து வரும் செல்போன்களை நுழைவாயிலிலேயே அலுவலகத்தில் கொடுத்துவிட்டு டோக்கன் பெற்றுக் கொள்ளும் படியும் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியில் செல்லும் பொழுது டோக்கனை கொடுத்து மீண்டும் செல்போன்களை பெற்றுக் கொள்ளும்படி நடைமுறையை பின்பற்ற உள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.