கோவை: பொள்ளாச்சி ஆழியாறு அணை இன்று அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள அணைகளில் ஒன்று ஆழியாறு அணை. இது பொள்ளாச்சி அருகே அமைந்துள்ளது. கடல் போல் வற்றாமல் காட்சியளிக்கும் நீர்த் தேக்கம் இது என்பதால் ஆழி+ஆறு= ஆழியாறு என்ற காரணப் பெயர் பெற்றது.
மொத்தம் 120 அடி உயரம் கொண்ட இந்த ஆழியாறு அணை மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இதனிடையே மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆழியாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், மதகுகள் வழியாக வினாடிக்கு 1,329 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.