கோவை: மேட்டுப்பாளையம் உட்கோட்டத்தில் 24 மணி நேரமும் 6 பைக்குகளில், ஸ்மார்ட் காக்கீஸ் என சொல்லக்கூடிய 12 போலீசார் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை புறநகரில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வகையில் ‘ஸ்மார்ட் காக்கிஸ்’ திட்டத்தை அண்மையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
அதன்படி, மேட்டுப்பாளையம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், காரமடை சிறுமுகை மற்றும் அன்னூர் காவல் நிலையங்களில் மொத்தம் 6 ரோந்து நவீன பைக்குகளில், 12 போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி அதியமான் கூறியதாவது:-
ஸ்மார்ட் காக்கீஸ்
உடனடியாக களத்திற்குச் சென்று குற்றங்களைத் தடுப்பதற்கும், பொதுமக்கள் போலீசாரை 100 அல்லது காவல் நிலைய எண்களுக்கு அழைத்து தகவல் கூறினால், அங்கேயும் விரைவாகச் செல்வதற்காகவும் ஸ்மார்ட் காக்கீஸ் தயாராக உள்ளனர்.
ஒரு ரோந்து பைக்கிற்கு 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சுழற்சி முறையில் 24 மணி நேரமும் இவர்கள் ரோந்தில் இருப்பார்கள்.
இந்த பைக்குகளில் ஜி.பி.எஸ். பொருத்தப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் உடையில் பாடி வார்ன் கேமரா, நவீன மைக், வயர்லெஸ் மற்றும் மதுபோதையில் ஒருவரைப் பரிசோதிக்கும் பிரெத் அனலைசர் உள்ளிட்டவையும் இருக்கும்.
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
இது தவிர பழைய குற்றவாளிகளின் முகங்களைக் கண்டறியும் எப்.ஆர், செயலி மற்றும் வாகன ஆவணங்களை ஆய்வு செய்ய பரிவாகன் செயலிகளும் இந்த போலீசார் வைத்திருப்பார்கள்.
பெண்கள் காவலன் செயலியைப் பயன்படுத்தும் போது, காவல் நிலைய போலீசாருக்கு அலர்ட் வரும். இவர்களுக்கும் அலர்ட் வரும் உடனடியாக களத்திற்குச் சென்று குற்றங்கள் தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.