கோவை: கோவை அருகே இருசக்கர வாகனத்தில் பணம் கடத்திய இருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்பட்ட 26.4 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் கோவை க.க.சாவடி பகுதியில் காவல்துறையினரின் வாகன தணிக்கையில் கைப்பற்றப்பட்டு உள்ளது. மேலும் இரு சக்கர வாகனத்தில் பணம் கடத்திய இருவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
சேலம் -கொச்சி தேசிய நெடுஞ்சாலை கோவை க.க.சாவடி அடுத்த எல்லை மாகாளியம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டு உள்ள காவல் துறை சோதனை சாவடி பகுதியில் இன்று காலை மதுக்கரை நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட நிலையில் கோவையில் இருந்து கேரளாவிற்கு இருசக்கர வாகனம் மூலம் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்து உள்ளது.
இதை அடுத்து கேரளா நோக்கிச் சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் எந்த வித ஆவணங்களும் இன்றி 26 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கவரிங் வளையல்கள் ஆகியவை கொண்டு கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அடுத்து அவற்றை கொண்டு சென்றவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த அப்துல் ஹக்கீம் மற்றும் அப்துல் ரகுமான் என தெரிய வந்தது.
மேலும் பணம் குறித்த உரிய தகவல்களை கூறாமல் முன்னுக்கு பின் முரணாக அவர்கள் பதில் அளித்ததால் இருவரையும் க.க.சாவடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.