கோவை: போலி தங்கக்கட்டிகளைக் கொடுத்து பெண்ணிடம் தங்க செயினை மோசடி செய்த பெண்ணை சரவணம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.
சிவானந்தபுரம் வேல்முருகன் நகரை சேர்ந்தவர் ராம்குமார் (34). இவரது மனைவி காயத்ரி (29). இவர்கள் சின்னவேடம்பட்டி ரோடு மணி நகரில் காஸ் அடுப்பு பழுது பார்க்கும் கடை நடத்தி வருகின்றனர்.
மேலும் ராம்குமார் காஸ் ஏஜேன்சியில் சிலிண்டர் டெலிவரி ஊழியராக உள்ளார். இவரது மனைவி கடையில் இருக்கும்போது, சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் அடிக்கடி வந்து காஸ் அடுப்பு லைட்டர் உள்ளிட்ட சிறு, சிறு பொருட்களாக வாங்கிச் செல்வார்.
இதனையடுத்து காய்த்ரி அந்த பெண்ணிடம் நட்பு ரீதியாக பழகினார். அப்போது அந்த பெண், தன்னை மைசூரை சேர்ந்தவர் என்றும், கோவையில் தங்கி கழிவு நீரில் தங்க துகளை சேகரிக்கும் பணி செய்து வருவதாகவும் கூறினார்.
அவர் தன்னிடம் தங்கக்கட்டி இருப்பதாகவும், அதனை விற்று பாதி பணத்தைக் கொடுத்தால் போதும் என்றும் தெரிவித்துள்ளார். அதற்கு நம்பிக்கையாக, ‘‘நீங்கள் தங்கக்கட்டியை விற்று பணம் எனக்கு கொடுக்கும் வரை, உங்களது நகைகளை என்னிடம் கொடுங்கள்’’ எனக் கூறினார்.
அவரது பேச்சை நம்பிய காயத்ரி தங்கக்கட்டியை வாங்கி விற்று கொடுக்க முன்வந்தார். இதனைத்தொடர்ந்து நேற்று காயத்ரி கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த அந்த பெண், சுமார் 9 செமீ நீளம், 6 செமீ அகலத்தில் ஒரு கட்டியை கொடுத்தார். அது தங்கக்கட்டி என தெரிவித்துள்ளார்.
அதனை பெற்றுக்கொண்ட காயத்ரி தனது மூன்றரை பவுன் தங்க செயினை அந்த பெண்ணிடம் கொடுத்தார். இதனையடுத்து காயத்ரி இந்த விவரத்தை தனது கணவரிடம் தெரிவித்தார்.
சந்தேகமடைந்த காயத்ரியின் கணவர் அந்த தங்கக்கட்டியை வாங்கி அருகே உள்ள நகைக்கடையில் கொடுத்து சோதித்து பார்த்தார். அப்போது அது போலி தங்கக்கட்டி என தெரியவந்தது.
அந்த பெண் நூதன முறையில் காயத்ரியிடம் மூன்றரை பவுன் தங்க நகையை ஏமாற்றி சென்றதும் தெரியவந்தது.
இது குறித்து காயத்ரி சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து அந்த மோசடி பெண்ணை தேடி வருகின்றனர்.




