Header Top Ad
Header Top Ad

கிணத்துக்கடவு தொகுதியில் வாக்காளர் பெயர் பட்டியலில் குளறுபடி- எம்எல்ஏ குற்றச்சாட்டு

கோவை: கோவை, கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி : 12,000 வாக்காளர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இரண்டு முறை பதிவாகி உள்ளதாக எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை, கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் 12 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு செய்யப்பட்டு உள்ளது என குற்றம்சாட்டி கிணத்துக்கடவு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அ.தி.மு.க வை சேர்ந்த தாமோதரன் மற்றும் பா.ஜ.க தெற்கு மாவட்ட தலைவர், முன்னாள் மாவட்ட தலைவர் உள்ளிட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் பவன் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எம்.எல்.ஏ தாமோதரன், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் மட்டும் சுமார் 11,700 வாக்காளர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இரண்டு முறை பதிவாகி உள்ளதாகவும், இதே போன்று அனைத்து தொகுதிகளிலும் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் கூறினார். தொகுதிக்கு உள்ளேயே ஒவ்வொரு பெயரும் வார்டுகள் மாறி, மாறி இரண்டு முறை பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் எனவே, இது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதே போல் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெள்ளளூர் குப்பை கிடங்கு பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருவதாகவும், இதனால் தண்ணீர் எந்த அளவிற்கு மாஸ் அடைந்து உள்ளது என்பது எல்லாம் அறிந்ததே என்றும் தற்போது திருப்பூரில் இருந்தும் கழிவுகள் கொண்டு வரப்பட்டு கொட்டப்படுவதால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருவதாகவும் பெரும் போராட்டத்தை சந்திக்க கூடிய சூழல் உருவாகி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அது மட்டுமின்றி வாக்காளர் பட்டியலில் இருந்து 1,200 க்கும் மேற்பட்ட வாக்காளர்களை பிரித்து புதிய வாக்குச்சாவடி அல்லது அதற்கு அருகில் உள்ள வாக்குச்சாவடியில் சேர்ப்பதற்கான அறிவிப்பு வந்து உள்ளதாகவும், அப்படி சேர்க்கும் பொழுது ஒரு வாக்குச்சாவடி தள்ளி வாக்காளர்களை சேர்க்கும் பொழுது வாக்கு செலுத்துவதில் சிரமம் இருப்பதாகவும், இந்த குளறுபடி இல்லாமல் பூத் சீரமைப்பு மற்றும் வாக்காளர் பட்டியல் சீரமைப்பு முறையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Advertisement

Recent News