Header Top Ad
Header Top Ad

கோவை தனியார் நிறுவனத்தில் கிடந்த மனித கை: போலீஸ் விசாரணையில் விலகிய மர்மம்!

கோவை: கோவை அருகே தனியார் நிறுவனத்திற்குள் கிடந்த மனித கை விவகாரத்தில் காவல்துறை விசாரணையில் உண்மை தெரியவந்தது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே கள்ளபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் ஸ்டோர் அறைக்கு அருகே துண்டிக்கப்பட்ட மனித வலது கை ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சம்பவம் தொடர்பான மர்மம் விலகியது. கள்ளபாளையத்தில் சுதாகர் என்பவருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தின் ஸ்டோர் அறை அருகே மனித கை கிடப்பதாக நிறுவன மேலாளர் வைரவநாதன், உரிமையாளரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சுதாகர், உடனடியாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த சூலூர் காவல்துறையினர், கண்டெடுக்கப்பட்ட கையின் உரிமையாளர் மற்றும் அது அங்கு வந்த சூழல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த கை திருப்பூரைச் சேர்ந்த அழகுபாண்டி என்பவருடையது என்பது தெரியவந்தது.

அழகுபாண்டி, மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, தண்டவாளத்தில் கை மற்றும் கால்களை வைத்து தற்கொலைக்கு முயன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் அவரது வலது கை துண்டாகி, கால்களும் பலத்த காயமடைந்தன. தற்போது அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

மேலும், அழகுபாண்டியின் துண்டிக்கப்பட்ட கை மற்றும் சிதைந்த கால்களை அகற்றுவதற்காக, கள்ளபாளையத்தில் உள்ள உயிரியல் மருத்துவக் கழிவு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கிருந்து ஒரு நாய் அவரது கையை எடுத்து, அருகிலிருந்த சுதாகரின் நிறுவன வளாகத்தில் வீசியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் கள்ளபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent News