கோவை: மேட்டுப்பாளையம் சாலையில் அடுத்த 90 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில், சாய்பாபா காலனி, அழகேசன் ரோடு சந்திப்பு முதல் எருக்கம்பெனி வரை மேம்பாலப் பணிகள் நடைபெறுகிறது. இதனால் ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 90 நாட்களுக்கு கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
போக்குவரத்து மாற்றம்
காந்திபுரம், பூமார்க்கெட் வடகோவை மேட்டுப்பாளையம் ரோடு வழியாக செல்லும் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் உட்பட அனைத்து கனரக வாகனங்களும் வடகோவை அவினாசிலிங்கம் கல்லூரியிலிருந்து இடது புறம் திரும்பி, பாரதி பார்க் ரோடு வழியாக சென்று GCT கல்லூரி ரவுண்டானாவில் வலது புறம் திரும்பி, தடாகம் சாலை வழியாக வெங்கிட்டாபுரம், கோவில் மேடு, இடையர்பாளையம் சென்று, அங்கிருந்து கவுண்டம்பாளையம் சாலையை அடைந்து துடியலூர் வழியாக மேட்டுப்பாளையம் செல்லலாம்.
கவண்டம்பாளையம் வழியாக கோவை நகருக்குள் வரும் அனைத்து இலகு ரக மற்றும் கனரக வாகனங்களும் காந்திபுரம், அவினாசி ரோடு செல்ல, நல்லாம்பாளையம் வழியாக கணபதியை அடைந்து, காந்திபுரம் வழியாக செல்லலாம்.
மேலும், சங்கனூர் சந்திப்பிலிருந்தும் இடது புறம் திரும்பி, கண்ணப்ப நகர் புதுப்பாலம் வழியாக சிவானந்தா காலனியை அடைந்து காந்திபுரம் செல்லலாம்.
காந்திபுரம், சிவானந்தா காலனியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் ARC சந்திப்பில் இடது புறம் திரும்பி கங்கா மருத்துவமனை, அழகேசன் ரோடு சந்திப்பில் வலது புறம் திரும்பி, அழகேசன் ரோடு வழியாக தடாகம் சாலையை அடைந்து வெங்கிட்டாபுரம், கோவில்மேடு, இடையர்பாளையம் வழியாக மேட்டுப்பாளையம் மற்றும் தடாகம் சாலை வழியாக செல்லலாம்.
NSR ரோடு வழியாக நகருக்குள் வரும் பேருந்துகள் உட்பட அனைத்து கனரக சரக்கு வாகனங்களும் NSR ரோடு, ஸ்டேட் பேங்க் சந்திப்பில் வலது புறம் திரும்பி, ராஜா அண்ணாமலை ரோடு வழியாக பாரதி பார்க் ரோடு சென்று, இடது புறம் திரும்பி அவினாசிலிங்கம் கல்லூரி சந்திப்பு வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடையலாம்.
மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்ப தருமாறு பொதுமக்களை அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த போக்குவரத்து மாற்ற அறிவிப்பை அந்தந்த பகுதி மக்களுக்கு உடனே பகிர்ந்து உதவிடுங்கள்