Header Top Ad
Header Top Ad

ஈஷா கிராமோத்சவம்: பரிசுத்தொகை ₹67 லட்சம்: பங்கேற்க வேண்டுமா?

கோவை: ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கிராமப்புற பகுதிகளில், வரும் ஆக.16ம் தேதி தொடங்குகிறது.

மூன்று கட்டமாக நடைபெறும் போட்டிகளில் மொத்த பரிசுத்தொகையாக ₹67 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதில் கிராமப்புற அணிகள் இலவசமாக பங்கேற்கலாம், ஆனால் முன்பதிவு செய்வது கட்டாயம் என்று ஈஷா நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஈஷா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:-

சத்குருவால் தொடங்கப்பட்ட ஈஷா கிராமோத்சவம் கிராமப்புற விளையாட்டு திருவிழாவின் 17-ஆவது பதிப்பாக “ஈஷா கிராமோத்சவம்-2025” ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் 30,000 கிராமங்களில் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்க உள்ளனர்.

நம் கிராமிய வாழ்வியலில் இருந்த பல்வேறு கலாச்சார அம்சங்களை நாம் இழந்து விட்டோம். இதனால் கிராம மக்களின் வாழ்வில் உற்சாகம் என்பது குறைந்து கொண்டே வருகிறது. கூடுதலாக கிராமங்களில் நிலவும் பொருளாதார பிரச்சனைகள் மற்றும் வேலை வாய்ப்பு இல்லாத சூழல்களால் இளைஞர்கள் போதை பழக்கங்களுக்கு அடிமையாகும் நிலையும் இருக்கின்றது.

Advertisement

இந்நிலையில் கிராம மக்களின் வாழ்வில் உற்சாகத்தை மீட்டெடுத்து, கொண்டாட்ட உணர்வை கொண்டு வருவதற்கான ஒரு முன்னெடுப்பாக ஈஷா கிராமோத்சவ திருவிழா சத்குருவால் 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது இளைஞர்கள் போதை பழக்கங்களிலிருந்து விடுபடவும், சாதிய தடைகளை உடைத்து, பெண்களுக்கு வல்லமை அளிக்கவும் உதவுகிறது.

மேலும் இது தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கானதாக இல்லாமல் விவசாயிகள், தூய்மை பணியாளர்கள், மீனவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் ஆகிய எளிய கிராம மக்களுக்காக நடத்தப்படுகிறது.

இது குறித்து சத்குரு கூறுகையில், “ஈஷா கிராமோத்சவம், விளையாட்டின் மூலம் வாழ்க்கையை கொண்டாடும் ஒரு திருவிழா. விளையாட்டு, சமூகப் பிரிவுகளைத் தாண்டி மக்களை ஒன்றிணைக்கும்; இதுதான் விளையாட்டின் சக்தி. ஜாதி, மதம் மற்றும் பிற அடையாளங்களின் எல்லைகளை உற்சாகமான விளையாட்டு மூலம் அழிக்க முடியும். இது ஒரு சிறந்த விளையாட்டு வீரராக மாறுவது பற்றியது அல்ல, மாறாக வாழ்நாள் முழுவதும் விளையாட்டு தன்மையுடன் இருப்பது பற்றியது. ஒரு பந்தை முழு ஈடுபாட்டுடனும் உற்சாகத்துடனும் வீச முடிந்தால், பந்து உலகத்தையே மாற்றும். உற்சாகமாக விளையாடுவதன் மகிழ்ச்சியை நீங்கள் அறிய வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

இதில் ஆண்களுக்கான கைப்பந்து (வாலிபால்) மற்றும் பெண்களுக்கான எறிபந்து (த்ரோபால்) போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மற்றும் முதல் முறையாக ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்த போட்டிகள் 3 நிலைகளில் நடைபெறும். முதல் நிலை கிளஸ்டர் அளவிலான போட்டிகள் இம்மாதம் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறும். இரண்டாம் நிலையில் மண்டல அளவிலான போட்டிகள் அடுத்த மாதம் செப்டம்பர் 7ம் தேதி நடைபெறும்.

இதனையடுத்து ஆறு மாநில அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டிகள் செப்டம்பர் 21ம் தேதி, கோவை ஈஷாவில் உள்ள புகழ்பெற்ற ஆதியோகி வளாகத்தில் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டிகளில் மாற்று திறனாளிகளுக்கான பாரா கைப்பந்து (வாலிபால்) போட்டியும் நடைபெறும்.

இப்போட்டிகளில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த மக்களால் மட்டுமே அணிகள் உருவாக்கப்பட முடியும். தொழில்முறை வீரர்கள் அணிகளில் இடம்பெற முடியாது.

இதில் கிராமப்புற அணிகள் இலவசமாக பங்கேற்கலாம்,

முன்பதிவுக்கு;- isha.co/gramotsavam, மேலும் தகவல்களுக்கு;- 83000 30999

ஈஷா கிராமோத்சவ விளையாட்டு போட்டிகளின் 3 நிலைகளிலும் பரிசுத் தொகைகள் வழங்கப்பட உள்ளன. அந்த வகையில் முதல் நிலை போட்டிகளில் முதல் நான்கு இடங்களை வெல்லும் அணிகளுக்கு முறையே ₹10,000, ₹7,000, ₹5,000 மற்றும் ₹3,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளன. அதே போன்று மண்டல அளவில் நடைபெறும் போட்டிகளில் முதல் நான்கு இடங்களில் வெற்றி பெறும் அணிகளுக்கு முறையே ₹12,000, ₹8,000, ₹6,000 மற்றும் ₹4,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளன.

இறுதிப்போட்டியில் முதல் நான்கு இடங்களில் வெற்றி பெறும் அணிகளுக்கு முறையே ₹5,00,000, ₹3,00,000, ₹1,00,000, ₹50,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளன. போட்டிகளின் மூன்று நிலைகளிலும் சேர்த்து மொத்த பரிசுத் தொகையாக ₹67 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது.

இந்த திருவிழாவில் விளையாட்டு போட்டிகளுடன், நம் தமிழ்நாட்டின் தவில் – நாதஸ்வரம், வள்ளி கும்மி, ஒயிலாட்டம், கேரளாவின் பஞ்சரி மேளம், செண்ட மேளம், தெலுங்கானா பழங்குடி மக்களின் குசாடி நடனம், கர்நாடகாவின் புலி வேஷம் போன்ற பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகளும், பொது மக்களுக்கான கோலப் போட்டிகளும் நடைபெற உள்ளன. இதனுடன் சிலம்பம் போட்டிகளும் நடைபெற உள்ளன.

Recent News