கோவை: கோவையில் வீடுகளுக்கே சென்று குடிமை பொருள் விநியோகிக்கும் தாயுமானவர் திட்டம் துவங்கியது.
தமிழ்நாட்டில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இல்லங்களுக்கே நேரில் சென்று குடிமைப் பொருள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் சாய்பாபா காலனி பகுதியில் இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று குடிமை பொருள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் உட்பட கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு குடிமைப் பொருட்களை வழங்கினர்.
இது குறித்து பேட்டி அளித்த கோவை மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா, இந்தத் திட்டத்தின் மூலம் கோவையில் 90 ஆயிரம் பயனாளிகள் பயன்பெறுவார்கள் என்றும் 1205 வாகனங்கள் இதற்காக தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
1215 கிளஸ்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த திட்டம் கோவை மாவட்டத்தில் மாதத்தில் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும் என தெரிவித்தார்.