கோவை: கோவையில் கல்லூரி மாணவரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய 4 பேர் கொண்ட கும்பல், பணம், நகையை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் ராஜகுமார் மகன் நிஷாந்த்(21). இவர் கோவை சின்னவேடம்பட்டி விநாயகர் கோயில் தெருவில் அறை எடுத்து நணபர்களுடன் தங்கி தனியார் கல்லூரியில் எம்பிஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் அறையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது கதவை உள்பக்கமாக தாழிடவில்லை. இந்நிலையில், அதிகாலை உள்ளே நுழைந்த 4 பேர் கும்பல் கிரிக்கெட் பேட், ஸ்டம்பால் நிஷாந்த் மற்றும் அவரது நணபர்களை தாக்கினர்.
மேலும், 2 பவுன் தங்க செயின், வெள்ளி காப்பு, ரூ. 6900 ஆகியவற்றை பறித்து கொண்டு மிரட்டி சென்றனர். தாக்குதலில் நிஷாந்துக்கு காயம் ஏற்பட்டது.
இது குறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவரை தாக்கி நகை, பணம் பறித்து தப்பிய 4 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.


 
                                    
