கோவை: நகை கடையில் சீட்டு நடத்தி சுமார் 70 லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவானவர்களின் இருப்பிடத்தை கூறினாலும் நடவடிக்கை இல்லையென பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் அருணா ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடையில் 50க்கும் மேற்பட்டோர் பல வருடங்களாக நகை சீட்டு ஏலச்சீட்டு என பல்வேறு வகை சீட்டுகளுக்கான பணத்தை கட்டி வந்துள்ளனர்.
இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு அனைவரும் சீட்டுக்கான தொகையை செலுத்திய நிலையில் அதற்குரிய பணத்தை அளிக்காமல் அந்த நகை கடையின் உரிமையாளர், கடையை மூடிவிட்டு சென்றுவிட்டதாகவும் வீட்டையும் காலி செய்துவிட்டு சென்றுவிட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் 50க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள காவல் நிலையத்திலும் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளனர்.
புகார் அளித்த பொழுது போலீசார் கடையின் உரிமையாளரை பேசுவதற்கு அழைத்த பொழுது உரிமையாளரின் மகள் வந்து திமிராக பேசி விட்டு சென்றதாகவும் ஆனால் தற்பொழுது வரை காவல்துறையினர் அவர்களை கைது செய்யாமல் தங்களது பணத்தையும் மீட்டுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் 50க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
மேலும் மோசடி செய்த அந்த கடையின் உரிமையாளர் குடும்பத்தினர் திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் தான் இருப்பதாகவும் இதனை காவல்துறையினரிடம் தெரிவித்தாலும் காவல்துறையினர் அவர்களை கைது செய்யாமல் அலட்சியம் காட்டுவதாக வேதனை தெரிவித்தனர்.