கோவை: சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாயை துரிதமாக செயல்பட்டு அதனை எடுத்து உயிரை காப்பாற்றிய ரயில்வே காவலர்களின் செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.
மேட்டுப்பாளையம் – போத்தனூர் இடையேயான மெமு ரயிலில் ஒரு பெண் அவரது 2 வயது மகனுடன் பயணம் செய்துள்ளார். அப்போது அந்த சிறுவன் மிட்டாய் சாப்பிட்டு கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மிட்டாய் தொண்டையில் சிக்கியுள்ளது.
அதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடையும் சூழல் ஏற்பட்டது. மேலும் சிறுவனுக்கு மூக்கில் இருந்து இரத்தம் வந்துள்ளது. அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் அலறி அழுதுள்ளார்.
அந்நிலையில் ரயில் பயணம் செய்து கொண்டிருந்த கோயம்புத்தூர் பிரிவு ரயில்வே பாதுகாப்பு படை (RPF) காவலர்கள் துரிதமாக செயல்பட்டு மிட்டாயை சிறுவனின் தொண்டையில் இருந்து வெளியேற்றினர்.
பின்னர் ரயில் கோவை வந்தடைந்ததும் சிறுவனை உடல் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில் சிறுவன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
துரிதமாக செயல்பட்டு சிறுவனின் உயிரை காப்பாற்றிய ரயில்வே போலிசாரின் செயல் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.