கோவை: ஹைதராபாத்தில் இருந்து தமிழக வழியாக கேரளாவிற்கு கடத்தப்பட்ட 2.5 கிலோ வெள்ளி மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருவரை போலிசார் கைது செய்தனர்.
கோவை அருகே வாளையார் பகுதியில் ஹைதராபாத்தில் இருந்து தமிழக வழியாக கேரளாவிற்கு கடத்தப்பட்ட 2.5 கிலோ வெள்ளி மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருவரை போலிசார் கைது செய்தனர்.

உரிய ஆவணங்கள் இன்றி ஹைதராபாத்தில் இருந்து தமிழகம் வழியாக கேரளாவிற்கு கடத்தப்பட இருந்த 2.5 கிலோ வெள்ளி மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை கோவை வாளையார் அருகே வாகன சோதனையின் போது க.க.சாவடி காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்து உள்ளனர்.
கோவை க.க.சாவடி காவல் நிலைய போலீசார் சேலம் கொச்சி தேசிய நெடுஞ்சாலை வாளையார் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோவையில் இருந்து கேரளா நோக்கி சென்ற இருசக்கர வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்த நபர் கொண்டு வந்த பையில் வெள்ளி கட்டிகள் மற்றும் பணம் ஆகியவை இருப்பது தெரிய வந்தது. அதற்கான ஆவணங்களை காவல் துறையினர் கேட்ட போது, அவர்கள் தங்களிடம் ஆவணங்கள் இல்லை என கூறி உள்ளனர்.
இதை தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த இருவரும் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அஜயன் மற்றும் தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் பகுதியைச் சேர்ந்த முகம்மது வலியுதீன் என்பது தெரிய வந்தது. மேலும் முகமது வலியுதீன் ஹைதராபாத்தில் இருந்து 2.5 கிலோ வெள்ளியை எந்த வித ஆவணங்களும் இன்றி பேருந்து மூலம் கொண்டு வந்ததும் தமிழக கேரள எல்லையான வாளையார் பகுதியில் வைத்து அஜயனிடம் கொடுத்து விட்டு மீண்டும் ஹைதராபாத் புறப்பட இருந்ததும் தெரியவந்தது.
மேலும் வரி ஏய்ப்பு செய்வதற்காக வழக்கமாகவே இதுபோன்று தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகளை பேருந்து மூலம் கொண்டு வந்து தமிழக கேரள எல்லையான வாளையாரில் கைமாற்றி விடுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த சுமார் இரண்டரை கிலோ எடையிலான வெள்ளிக் கட்டிகள், ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் மூன்று செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.