கோவை: வன விலங்குகளை கட்டுப்படுத்த தவறியதாக கூறி கோவை மாவட்ட வன அலுவலகத்தில் தரையில் அமர்ந்து முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், வால்பாறை, தொண்டாமுத்தூர் பகுதிகளில் தொடர்ச்சியாக காட்டு யானைகள் மக்கள் வாழ்விடப் பகுதிகளுக்குள் நுழைந்து மக்களை தாக்கி கொல்வதும், சிறுத்தை போன்ற வேட்டை விலங்குகள் குழந்தைகள் மற்றும் கால்நடைகளை கடித்து இழுத்துச் செல்வதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
அதனால் மக்கள் உயிர் பயத்தோடு வாழக் கூடிய நிலையை உருவாக்கி இருக்கிறது என்றும், மேலும் காட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதும் குடியிருப்புகள் வாகனங்கள் உள்ளிட்ட உடமைகளை சேதப்படுத்துவதும், அன்றாட நிகழ்வாக மாறி உள்ளதாகவும், எனவே காட்டு யானைகள் மக்கள் வாழ்விடப் பகுதிகளுக்குள் நுழைவதை அகழிகள், சூரிய மின் வேலிகள் அமைத்து தடுப்பதோடு மனிதர்களை கால்நடைகளை தாக்கி கொல்லும் புலிகள் சிறுத்தைகள் உள்ளிட்ட வேட்டை விலங்குகளை கூண்டு வைத்து பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்
பயிர் காப்பீடு வழங்குவதை முறைப்படுத்தவும் பற்றாக்குறையாக உள்ள வேட்டை தடுப்பு காவலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் எனவும், 2006 வன உரிமை சட்டத்தின் படி மலைப் பகுதியை மக்களின் வாழ்வாதார உரிமையை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வனப் பகுதிக்குள் விலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறுவதை தடுக்க வேண்டும் எனவும், கோவை மாவட்ட வன அலுவலக வளாகத்தில் அமர்ந்து நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.