கோவை: துணை ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக கோவை நூர் முகமது போட்டியிடுகிறார்.
கோவை சேர்ந்தவர் நூர் முகமது ( 67). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். 1996 ஆம் ஆண்டு முதல் இவர், மாநகராட்சி கவுன்சிலர் , சட்டமன்றம், பாராளுமன்றம் என 47 முறைமுறை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார்.
1997 ஆம் ஆண்டு சுயேட்சையாக, குறிச்சி நகராட்சியில் 6 ஆவது வார்டு கவுன்சிலராக போட்டியிட்டு ஒரு முறை வெற்றி பெற்றார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுள்ளார். தற்போதும் நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் 48 ஆவது முறையாக துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்.
இதற்காக தற்போது டெல்லியில் துணை ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
வாக்கு உரிமையின் சக்தி மக்களுக்கு தெரிவதில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் 30% மக்கள் தங்கள், வாக்குகளை செலுத்துவதில்லை. ஜனநாயக உரிமை காசு வாங்கிவிட்டு ஓட்டுப்போடுவதல்ல, இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார் .
நூர் முகமது குடுகுடுப்பைக்காரன், விவசாயி, குதிரை வண்டியில் ராஜா வேடமிட்டும், கழுதையை பிடித்துக்கொண்டும், மணி அடித்து பால் உற்றியும், சவப்பெட்டியை எடுத்துக்கொண்டும் வித்தியாசமான விதத்தில், பல தேர்தல்களில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.