கோவை: மிலாது நபி விழாவை முன்னிட்டு கோவையில் ஒரு லட்சம் பேருக்கு பிரியாணி சமைத்து வழங்கப்பட்டது.
இஸ்லாமிய மக்களின் கடவுள் தூதுவராக விளங்கும் முகமது நபியின் பிறந்த நாள் மிலாது நபி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் இஸ்லாமிய மக்கள் அனைவரும் நபிகளின் சிறப்புகளை போற்றி வழிபடுவர்.
நேற்று முதலில் பள்ளிவாசல்களில் மிலாது நபி சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. அதில் ஆயிர கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்பு தொழுகைகளை மேற்கொண்டனர்.

மிலாது நபி பண்டிகையின் ஒரு பகுதியாக கோவை கோட்டைமேடு பகுதியில் இஸ்லாமியர்கள் பலரும் இணைந்து ஒரு லட்சம் பேருக்கு பிரியாணி உணவு, குஸ்கா ஆகியவற்றை சமைத்து வழங்கினர்.
இரவு துவங்கி அதிகாலை வரை சுமார் 20க்கும் மேற்பட்ட பெரிய பெரிய அண்டாக்களில் பிரியாணி உணவு சமைக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. இதனை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் வரிசையாக நின்று வாங்கிச் சென்றனர்.

தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அரபி பாடசாலை குழந்தைகள் நபிகள் நாயகத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் அப்பகுதியில் நடனமாடி அவரது சிறப்புகளை எடுத்துரைத்தனர்.