கோவை: கோவையில் நடைபெற்ற வன தியாகிகள் தினத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க உயிரிழந்த வன பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வன உயிர் பயிற்சியாக வளாகத்தில் வன தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் வனத்துறையில் பணியின் பொழுது உயிரிழந்தவர்களுக்கு 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டு அங்குள்ள வன தியாகிகள் நினைவு தூணில் மலர் வளையங்கள் வைத்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் இந்த ஆண்டு பணியின் பொழுது உயிரிழந்த வன பணியாளர்கள் குடும்பத்தினருக்கு பொன்னாடை வழங்கி மரியாதை செலுத்தப்பட்டு அவர்களது கோரிக்கைகள் கேட்டறியப்பட்டன.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அதிகாரிகள், வன பணியாளர்கள் பாதுகாப்பாக செயல்பட வேண்டும் என்றும் எதிர்பாராத சம்பவங்களில் இது போன்ற துயர சம்பவங்கள் நிகழ்வதாக குறிப்பிட்டனர்.

மேலும் வனப்பணியாளர்கள் பணியில் செலுத்தும் கவனத்தை உயிரை பாதுகாப்பதிலும் செலுத்த வேண்டும் என தெரிவித்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு என்றென்றும் துணை நிற்கும் என்றும் தேவையான உதவிகளை செய்து தரும் என்றும் கூறினர்.

இந்த நிகழ்வில் வன உயிர்பயிற்சியக இயக்குநர் சேவாசிங், மத்திய அகாடமி தலைவர் திருநாவுக்கரசு, ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ், தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.