கோவை: தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளர் மயூரா ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
கோவையைச் சேர்ந்தவரும் காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளருமான மயூரா ஜெயக்குமார் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ம் தேதி அக்கட்சி நிர்வாகி வேணுகோபாலை வழியனுப்ப தனது ஆதரவாளர்களுடன் கோவை விமான நிலையம் சென்றார்.
கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் ஏற்பட்டிருந்த நிலையில், அங்கு ஐஎன்டியூசி மாநில தலைவர் செல்வனும் தனது ஆதரவாளர்களுடன் சென்றிருந்தார்.
அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே விமான நிலைய வளாகத்திலேயே மயூரா ஜெயக்குமார் ஆபாச வார்த்தைகளால் செல்வனை கடுமையாகத் திட்டினார். இருதரப்பும் மாறி மாறி சண்டைக்கு நின்றனர்.
தொடர்ந்து அங்கிருந்த காங்கிரஸ் கட்சியினர் இருவரையும் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ காட்சிகள் வேகமாகப் பரவி, ஊடகங்களிலும் செய்தியானது.
இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர், தற்போது அந்த வழக்கு கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கொரி மயூரா ஜெயக்குமார் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், காவல்துறை தரப்பு அக்டோபர் மாதம் 10ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.