கோவை: நானும் அரசியலுக்கு வரலாமே என்று கோவையில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, வாகை சந்திரசேகர்,ஆகியோர் நடிப்பில் உருவாகிள்ள சக்தி திருமகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் குறித்து படக்குழுவினர் பல்வேறு திரையரங்குகளுக்கு சென்று பார்வையாளர்களிடம் கேட்டறிந்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை ப்ராட்வே திரையரங்கில் சக்தி திருமகன் திரைப்படம் குறித்து நடிகர் விஜய் ஆண்டனி பார்வையாளர்களை சந்தித்து கேட்டறிந்தார். அங்கு இருந்த பார்வையாளர்கள் திரைப்படம் நன்றாக உள்ளது என்று தெரிவித்து விஜய் ஆண்டனி உடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த விஜய் ஆண்டனி, இது தன்னுடைய 25ஆவது படம் என்றும் பார்த்தவர்கள் அனைவரும் புது முயற்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளனர் என தெரிவித்தார். எந்த ஒரு நாட்டிலும் ஜனநாயகம் சரியாக இல்லை என்றால் இது போன்ற ஒரு படைப்பை படைக்க முடியாது என தெரிவித்த அவர் இந்த திரைப்படம் மத்திய மற்றும் மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாமல் வெளியாகி இருக்காது என தெரிவித்தார். மத்திய மாநில அரசு தனக்கு அளித்த ஒத்துழைப்பிற்கு நன்றிகடன் பட்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும் இந்த திரைப்படத்தின் இயக்குனர் கதாபாத்திர நடிகர்கள் இசையமைப்பாளர்கள் என அனைத்து குழுவினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
ஜென்டில்மேன் முதல்வன் அமைதிப்படை ஆகிய படங்களில் காட்டப்படாத ஒரு பரிமாணத்தில் உண்மைக்கு பொருத்தமாக திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த திரைப்படத்தை பார்க்காதவர்கள் கண்டிப்பாக வந்து பார்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
பெரிய பெரிய இயக்குனர்கள் நடிகர்கள் கூட அதிக அளவில் ஆன பட்ஜெட் நிறைந்த படங்களில் ஓரிரு விஷயங்களை மறந்து விடுகிறார்கள், என்றும் அப்படி இருக்கும் பொழுது இந்த திரைப்படம் தவறான படம் என்று எண்ண முடியாது என்றும் பிரபு படத்தை தைரியமாக திரைகளுக்கு சென்று பார்க்கலாம் என தெரிவித்தார். மேலும் இந்த திரைப்படம் ஒரு புனையப்பட்ட கதை தான் எனவும் தெரிவித்தார்.
நாம் அனைவரும் ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு இந்த திரைப்படம் வெளியானதே ஒரு சான்று என தெரிவித்தார். இந்த திரைப்படம் தமிழ்நாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டது இந்திய அரசை மையப்படுத்தி எடுக்கப்பட்டது என்றெல்லாம் கிடையாது என்றும் இந்த படத்தில் பேசப்பட்ட பிரச்சனைகள் உலகம் முழுவதும் இருப்பது தான் என சுட்டிக்காட்டினார். அரசியல் என்பது உலக பிரச்சனை என தெரிவித்த அவர் ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் என கூறினார். இரண்டாம் பாகம் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்தார்.
விஜயின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பியதற்கு, அனைத்து கட்சியினர்களும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் அடுத்த தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள் என்றும் என் அனைவரையும் போட்டியாளராக பார்க்க வேண்டும் என்று தெரியவில்லை, குப்பை கொட்டி கிடக்கும்போது இவர்தான் அள்ள வேண்டும் இவர் அள்ள கூடாது என்றெல்லாம் என்றெல்லாம் இல்லாமல் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று வருவதால் அனைவர் மீதும் உயரிய கருத்து தான் உள்ளது என தெரிவித்தார்.
மக்கள் சேவை என்று வரும் பொழுது இவர் நல்லவர் இவர் கெட்டவர் என்று யாரையும் பிரித்து பார்க்க வேண்டாம் அனைவரும் மக்கள் சேவைக்கு வருவது சந்தோஷம் என தெரிவித்தார். இசையில் தற்பொழுது பலரும் ஒருவரையே நாடி செல்வது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர் அனைவரும் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் அனைவரும் முயற்சி செய்துதான் வந்துள்ளார்கள் என தெரிவித்தார். KPY பாலா மீது தற்பொழுது எழுந்திருக்கும் விமர்சனங்கள் குறித்தான கேள்விக்கு அவரை பற்றி நான் விசாரிக்கவில்லை என பதில் அளித்தார்.
விஜய் உடன் இணைந்து விஜய் ஆண்டனி அரசியல் பயணம் செய்வாரா என்ற கேள்விக்கு, அனைவருடனும் இணைவதற்கு ஜனநாயகத்தில் வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பிய அவர் ஒவ்வொரு கட்சியினருக்கும் ஒரு நல்ல கொள்கை இருக்கும் என்றார். விஜய் ஆண்டனி நல்ல நடிகராக இருக்கும் பொழுது அரசியலுக்கு ஏன் வரக்கூடாது என்று கேள்விக்கு வரலாமே என தெரிவித்தார்.
பிட்காயின், ஆன்லைன் கரன்சி பற்றி எல்லாம் என்பதால் அது பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.