கோவை: அதிமுக ஆட்சியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என கோவையில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியாவில் உலக புத்தொழில் மாநாடு அக்டோபர் 9ம் தேதி நடைபெற உள்ளது . அம்மாநாட்டை தமிழக முதலமைச்சர் துவக்கி வைக்க உள்ளார். இந்நிலையில் மாநாடு குறித்தான ஆய்வு கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில், நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்துகொண்டு கல்வி, தொழில்மற்றும் வர்த்தக நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் TNGSS என்ற செயலியையும் அமைச்சர் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அம்பரசன், அக்டோபர் மாதம் 9 மற்றும் 10ஆம் தேதி கோவை கொடிசியாவில் உலக புத்தொழில் மாநாடு நடைபெறுவதாகவும் அக்டோபர் ஒன்பதாம் தேதி தமிழக முதலமைச்சர் இந்த மாநாட்டை துவக்கி வைக்க உள்ளதாக கூறினார். இந்த மாநாட்டிற்கான லோகோ மற்றும் இணையதளத்தை ஏற்கனவே துணை முதலமைச்சர் துவக்கி வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில் 39 நாடுகளில் இருந்து 267 பங்கேற்பாளர்களுடன் 30,000 மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் இந்தியாவில் முன்னணியில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் ஒன்றிய அரசின் பத்து துறைகள் மாநில அரசின் 10 துறைகளும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் 15 துறைகளும் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார். இந்த மாநாட்டில் 750க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாகவும் 315 க்கும் மேற்பட்ட நிகழ்சிகள் நடத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு எந்த முயற்சியும் செய்யாத நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் முக்கியத்துவத்தை அறிந்து 70க்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமித்ததன் அடிப்படையில் தமிழகத்தில் மிகச் சிறப்பாக இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார். மேலும் இதனை அதிக எண்ணிக்கையில் உருவாக்குவதற்காக நிதி உதவி திட்டமும் துவங்கப்பட்டிருப்பதாகவும் அதன்படி நான்காண்டுகளில் 212 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 79 கோடியே 49 லட்சம் தமிழக அரசு முதலீடு செய்துள்ளதாக கூறினார்.
43 எஸ்சி எஸ்டி ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ள இருப்பதாகவும் அரசு முதலீடுடன் துவங்கப்பட்ட நிறுவனங்களில் 68 நிறுவனங்கள் 554 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பில் வெளி முதலாளிகளிடமிருந்து முதலீடுகளை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வளர்த்தெடுக்க தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதாகவும் குறிப்பாக ஸ்டார்ட் அப் TN மூலமாக நவீன வடிவமைப்பு உதவி மையம், கல்வி நிலையங்களில் இலவச இன்குபேஷன் சென்டர், புத்தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டுவதற்கு மெட்டா TN தளம், பெரியார் சமூக நீதித் தொழில் வள மையம், கிராமம் தோறும் புத்தொழில் மையம் ஆகிய பலவற்றை செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.
2021ம் ஆண்டு 2032 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்தான் பதிவு செய்யப்பட்டு இருந்ததாகவும் ஆனால் தற்பொழுது 12,171 ஆகவே உயர்ந்திருப்பதாகவும் அதில் 6063 நிறுவனங்கள் பெண்கள் நிறுவனங்களாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் ஸ்டார்ட் அப் தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு கடைசியில் இருந்ததாகவும் தற்பொழுது முதல் இடத்திற்கு முன்னேறி இருப்பதாகவும் கூறினார்.
MSME துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் பீக் ஹவர் மின் கட்டணம் தொடர்பான கேள்விக்கு, அதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 250 கோடி ரூபாய் அந்த துறைக்காக நாங்கள் பணம் செலுத்தி வருவதாகவும் அது MSME துறையினருக்கும் தெரியும் என்று கூறினார். புதிய இயந்திரங்களுக்கான மானியம் பெறுவதில் காலதாமதம் ஆவது தொடர்பான கேள்விக்கு அண்ணல் அம்பேத்கர் திட்டத்தில் மட்டும் அதிக விண்ணப்பங்கள் வரப்பெற்றதால் சீனியாரிட்டிபடி அந்த மானியங்களை கொடுத்து வருவதாகவும் மற்றவை எல்லாம் எளிதில் கொடுத்து விடுவதாக தெரிவித்தார்.
கடந்த பத்து வருடத்தில் MSME துறையில் 52 ஆயிரம் பேர் மட்டும் தான் தொழில் முனைவோர்களாக இருந்ததாகவும் நாங்கள் நாலே வருடத்தில் 66,000 பேரை உருவாக்கி இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் வங்கிகளிலும் கடனை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் ஏதேனும் புகார்கள் இருந்தால் அதை சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்தான கேள்விக்கு, அதை புரிந்து கொள்ள நான்கைந்து நாட்களாகும் என்றும் கூறினார். ஜிஎஸ்டி குறித்து தமிழ்நாடு அரசு மெளனம் காத்து வருவதாக வானதி சீனிவாசன் தெரிவித்திருந்த கருத்து தொடர்பான கேள்விக்கு, எதிர்க்கட்சிக்காரர்கள் அவ்வாறு தான் கூறுவார்கள் என்றார்.
தமிழ்நாடு நிதி அமைச்சர் மத்திய அளவில் நடைபெறும் கூட்டத்தில் தொடர்ந்து பங்கேற்பதாகவும் எங்கள் துறை சார்ந்த பிரச்சினைகள் பற்றி வலியுறுத்தி வருவதாகவும் ஆனால் நமக்கு ஒத்து வராத அரசு என்பதால் நாம் கூறுவதை கேட்பது கிடையாது என குற்றம் சாட்டினார். வெட் கிரைண்டர் துறை சார்ந்த பிரச்சினை குறைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மூலம் மத்திய அரசுக்கு வலியுறுத்துவோம் என்றும் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூட்டணி தர்மத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்று ஜோதிமணி குற்றம் சாட்டியது தொடர்பான கேள்விக்கு, நாம் தொழிலைப் பற்றி பேசி வருகிறோம் எனவே அதனை விட்டு விடலாம் என தெரிவித்தார்.