கோவை: கோவை மாநகராட்சியில் எத்தனை தெருநாய்கள் உள்ளன அவற்றைப்பிடிக்கவும், ரேபிஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் எத்தனை பணியாளர்கள் உள்ளனர் என்பது குறித்த விவரங்களை மாநராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துடியலூரில் தெருநாய்களுக்கு ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி போடும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாநகராட்சியில் தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும், வளர்ப்பு நாய்களை முறைப்படுத்துவதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மாநகராட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசி போடுவதை வேகப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் 11 ஆயிரத்து 17 நாய்களும், கிழக்கு மண்டலத்தில் 24 ஆயிரத்து 404 நாய்களும், மேற்கு மண்டலத்தில் 22 ஆயிரத்து 85 நாய்களும், வடக்கு மண்டலத்தில் 22 ஆயிரத்து 69 நாய்களும், தெற்கு மண்டலத்தில் 31 ஆயிரத்து 499 நாய்களும் உள்ளன.
1.11 லட்சம் தெருநாய்கள்

இந்த 5 மண்டலங்களில் சுமார் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 74 நாய்கள் கண்டறியப்பட்டு கடந்த 2025 ஏப்ரல் மாதம் முதல் வரும் 2026 பிப்ரவரி வரை சுமார் 11 மாதங்களுக்குள் அனைத்து நாய்களுக்கும் ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக கோவை மாநகராட்சியில் தற்போது நாய்களைப் பிடிக்கும் பணியை மேற்கொள்ள 2 நாய் பிடிக்கும் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.
ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு கால்நடை மருத்துவர், 2 நாய் பிடிக்கும் பணியாளர்கள், ஒரு ஓட்டுநர் மற்றும் ஒரு உதவியாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாய் பிடிப்பவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. நாய்களைப் பிடிப்பதற்காக வலைகள் வழங்கப்பட்டு, அதனைக் கொண்டு நாய்கள் பிடிக்கப்படுகின்றன. மேலும் ஒரு நாளைக்கு 200 நாய்களுக்கு ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி போடப்படுகிறது.
என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.