கோவை: கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர்கள் 40-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோவை சுங்கம் பகுதியிலுள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர்கள் நாற்பதாவது நாளாக போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான பணபலனை வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஏற்படுத்தி தர வேண்டும்.
ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியத்தை முழுமையாக வழங்க வேண்டும், 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களையும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும், காலி பணியிடங்களை கருணை அடிப்படையில் நிரப்ப வேண்டும், பணிமனை, போக்குவரத்து பணிகள் ஆகியவற்றை கான்ட்ராக்ட் முறையில் விடுவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெறும் நாற்பதாவது நாள் போராட்டத்தில் சிஐடியு மாநில தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சவுந்தரராஜன், இதுபோன்று நீண்ட நெடிய காலம் ஒரு போராட்டம் நடந்ததில்லை. அரசின் அநீதி அரசின் கொடுமை அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.
எதையும் கூடுதலாக கேட்டு போராட்டம் நடைபெறவில்லை என்றும், இவர்களுக்கான உரிய பணம் அரசாங்கத்திடம் உள்ளது, அதனை தர மறுக்கிறார்கள் என்றார். பணி ஓய்வு பெறுகின்ற பொழுதே அவர்களுக்கு உரிய பணப்பலன் கொடுக்க வேண்டும் ஆனால் 25 மாதங்களாக அதனை வழங்கவில்லை என தெரிவித்தார். எங்கள் பணம் அரசாங்கத்திடம் இருக்கும் பொழுது கடன் வாங்கி வாழ்க்கையை நடத்த வேண்டி இருப்பதாகவும் கூறினார். மேலும் மூத்த தொழிலாளர்கள் மருத்துவ காப்பீடுக்கு கையேந்தி நிற்பதாகவும் அதைக் கூட அரசு செய்து தர மறுப்பதாக குற்றம் சாட்டினார்.
ஓய்வு பெற்றவர்களின் பிரச்சனை ஒரு புறம் இருக்கும் பொழுது பணியில் இருப்பவர்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளதாக கூறினார். ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை நீதிமன்றத்தில் சென்று வெற்றி பெற்றும் கூட முழுமையாக வழங்கப்படாமல் இருப்பதாக தெரிவித்தார். 2013ஆம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ப்பதாக முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது தெரிவித்ததை கடுகளவும் தற்பொழுது செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார்.
பல்வேறு காலி பணியிடங்கள் இருக்கும் பொழுதும் கூட கருணை அடிப்படையில் வேலையையும் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு பணியை வழங்கவில்லை என தெரிவித்தார். மேலும் போக்குவரத்து எனும் பொதுத்துறைக்கே அபாயம் விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சாடிய அவர் காண்ட்ராக்ட் முறையில் வேலை ஆட்களை நியமிப்பது பணிமனையை தனியாரிடம் ஒப்படைப்பது போன்ற செல்களில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.
கலைஞர் உட்பட இந்த அரசு கொள்கைகளை அறிவித்து கொள்கைகளுக்கு மாறாக நேர் எதிராக செயல்படுவதாக தெரிவித்தார். மேலும் எங்கள் பிரச்சனைகளுக்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அனைத்து துறைகளுக்கும் பணம் இருக்கும் இவர்களுக்கு மட்டும் பணம் இருக்காது என்று கூறுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
இந்த துறையின் கீழ் பிடித்து வைத்துள்ள PF, கிராஜுவிட்டி, சொசைட்டி போன்றவற்றின் பணம் 15 ஆயிரம் கோடி என்றும் இதையெல்லாம் உரிய முறையில் அரசு கட்ட தவறியதால் எங்களுக்கு கடன் கிடைப்பதில்லை என்றார். இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகரும் என்று தெரிவித்தார்.