கோவை: உணவு தேடி வெள்ளியங்கிரி கோயிலுக்குள் நுழைந்த ஒற்றைக் காட்டு யானையால் பக்தர்கள் அலறி அடித்து ஓடினர்.
கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு இருந்து 7-வது மலையில் சுயம்புவாக தோன்றிய சிவனை தரிசிக்க வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய 4 மாதங்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
இந்நிலையில் ஆயுத பூஜை, விஜயதசமி போன்ற விழாக்கள் வந்ததை அடுத்து பூண்டி அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் சன்னிதியில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
அதே பகுதியில் பூஜை சாமான் கடைகள், அன்ன தான கூடம் உள்ளிட்டவைகளை உள்ளது. கோவிலின் உணவு கூடவும் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து வந்த ஒற்றைக் காட்டு யானை அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு வைத்து இருந்த உணவுப் பொருள்கள், உணவை தின்றுவிட்டு சேதப்படுத்தி சென்றது. இதனை கட்டுப்படுத்த வனத் துறையினர் கும்கி யானை வர வழைத்து அங்கு முகாமிட்டு கண்காணித்து இருந்தது.
அதனால் அந்த காட்டு யானை கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் வராமல் இருந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் வந்த அந்த ஒற்றை காட்டு யானை உணவைத் தேடிக் கொண்டு கோயிலுக்குள் நுழைந்தது, இதனால் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதனை அங்கு இருந்தவர்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளனர். அந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் கோவில் யானை உள்ளது போல், நிரந்தரமாக அப்பகுதியில் வனத் துறையினர் முகாமை அமைத்து கும்கி யானை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதே அனைத்து பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.