டிராபிக்ல சிக்கிக்காதீங்க… கோவையில் நாளை முதலமைச்சரின் பயண விவரத்தைத் தெரிஞ்சுக்கோங்க…!

கோவை: முதலமைச்சர் ஸ்டாலின் நாளை கோவை வர உள்ள நிலையில், அவரது பயண விபரங்கள் வெளியாகி உள்ளன. கோவை மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் தவிர்ப்பதைக் கருத்தில் கொண்டு இந்த தகவல் பகிரப்படுகிறது.

கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் விதமாகவும், கோவையின் புதிய அடையாளமாக உருவெடுத்துள்ள அவிநாசி சாலை மேம்பாலத்தை திறந்து வைக்கவும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை காலை கோவை வருகிறார்.

சரியாக காலை 9:30 மணியளவில் கோவை விமான நிலையம் வரும் முதலமைச்சருக்கு, அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் மற்றும் திமுக தொண்டர்கள் அங்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். இதனால் காலை 9 மணி முதலே அவினாசி சாலையில் போக்குவரத்து அதிகரிக்கலாம்.

விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, காலை 9:45 மணி அளவில், கொடிசியா அரங்கில் நடைபெறும் உலக புத்தொழில் இயக்க மாநாட்டை ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து கொடிசியா அரங்கில் இருந்து அவினாசி சாலை மார்க்கமாக புறப்பட்டு காலை 11 மணியளவில் கோல்டுவின்ஸ் செல்கிறார். அங்கிருந்து அவினாசி சாலை ஜிடி மேம்பாலத்தைத் திறந்து வைக்கிறார். தொடர்ந்து அவர் புதிய மேம்பாலத்தில் பயணம் செய்து பார்வையிட உள்ளார்.

பின்னர், காலை 11.30 மணி அளவில், கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் உயிர் அமைப்பு சார்பில் நடைபெறும் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தொடர்ந்து மதியம் 12 மணி அளவில் சிட்கோ (குறிச்சி) பகுதியில் நடைபெறும் பொற்கொல்லர் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறார்.

அங்கு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, கோவை விமான நிலையம் புறப்படுகிறார். விமான நிலையத்தில் மதிய உணவிற்குப் பின், மதியம் 2:30 மணியளவில் விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

இதனிடையே முதலமைச்சர் வழிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே கோவை மாநகர போலீசார் அறிவித்துள்ளனர். அதனை கீழே காணலாம். முன்னதாக இந்த செய்தியை உங்கள் நட்பு வட்டத்திற்கும், மாணவர்களுக்கும் பகிர்ந்து உதவிடுங்கள்…

Recent News

Video

Join WhatsApp