கோவை: கோவையில் மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டிய கும்பல், தட்டிக்கேட்ட டிரைவரை தர தரவென இழுத்துச் சென்று கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. சரக்கு ஆட்டோ ஓட்டுநர்.
இவர் அப்பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது, அவ்வழியே காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் தாறுமாறாக காரை ஓட்டிச் சென்றனர். மது போதையில் இருந்த அந்த கும்பல் மற்ற வாகனங்கள் மீது காரை மோதுவது போன்று சென்றனர்.
இதைப் பார்த்த சுடலை முத்து, “ஏன் இவ்வாறு செல்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அப்போது அந்த நான்கு பேரும் மது போதையில் தகாத வார்த்தைகளால் பேசி சுடலையை மிரட்டினர்.
மேலும், இரும்புக் கம்பியால் தலை மற்றும் முகத்தில் பலமாக தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்றனர்.
இந்நிலையில் சுடலைமுத்து அவர்களின் காரை மறிக்க முயன்றார். அப்போது காரில் இருந்த கும்பல் அவரின் கழுத்தைப் பிடித்து தரதரவென காரில் இழுத்துக் கொண்டு சாலையில் நடுவே இருந்த தடுப்புச் சுவர் மீது மோதி கொலை செய்ய முயன்றனர்.
சுதாரித்துக் கொண்ட சுடலைமுத்து காரில் இருந்து கையை தட்டி விட்டு நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தலை 26 மற்றும் முகத்தில் 8 இடங்களில் தையல் போடப்பட்டுள்ளது. தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் மது போதை ஆசாமிகள் சுடலைமுத்துவைக் காரில் தரதரவென இழுத்துச் செல்லும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகள் தற்பொழுது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





