கோவை: கோவை அவிநாசி சாலை பழைய மேம்பாலத்திற்கு கீழ் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
கோவை மாநகரில் அவிநாசி சாலையில் அமைந்துள்ள பழைய மேம்பாலம் மாநகரின் முக்கிய மேம்பாலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. வட கோவை டவுன்ஹால் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை இணைக்கும் மேம்பாலமாக இந்த மேம்பாலம் ஆனது இருந்து வருகிறது.
இந்நிலையில் வடகோவைப் பகுதியிலிருந்து வந்த கார் ஒன்று மேம்பாலத்தின் கீழ்வழியில் சென்ற பொழுது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து புகை கிளம்பியுள்ளது இதனை பார்த்து சுதாரித்த கார் ஓட்டுநர் உடனடியாக காரை நிறுத்தி உள்ளார். காரை நிறுத்திய சிறிது நேரத்திலேயே கார் முன்பகுதியில் இருந்து அதிகமான புகை வெளியேறி தீப்பிடிக்க துவங்கி உள்ளது.
இதனால் சக வாகன ஓட்டிகள் அங்கிருந்து நகர்ந்து சென்றனர். பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் காரில் பரவிய தீயை அணைத்தனர். கார் என்ஜின் பகுதி அதிக அளவு தீப்பிடித்ததால் கார் டோப் செய்து எடுத்து செல்லப்பட்டது.
இதன் காரணமாக மேம்பாலத்திற்கு அடியில் அதிகமான புகை எழுந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இந்த சம்பவம் முடிந்த பின்னர் போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.



