கோவை: மேட்டுப்பாளையம் கோவை இடையேயான மெமு ரயில் நாளை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
வடகோவை ரயில் நிலைய தண்டவாள பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனையொட்டி போத்தனூர் – மேடுப்பாளையம் மெமு ரயில் நாளை ரத்து செய்யப்படுகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பராமரிப்பு பணியால் நாளை போத்தனூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு காலை 9.40 மணிக்கு புறப்பட்டு செல்லும் மெமு ரயில் (வ.எண்: 66612), மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு பகல் 1.05 மணிக்கு புறப்பட்டு செல்லும் மெமு ரயில் (வ.எண்: 66615) ஆகிய 2 ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல், அன்றைய தினம் ஆழப்புழாவில் இருந்து தன்பாத்திற்கு காலை 6 மணிக்கு புறப்பட்டு செல்லும் ரயில் (வ.எண்:13352) கோவை ரயில் நிலைய சந்திப்பிற்கு வராமல் போத்தனூர் ரயில் நிலையத்தில் பகல் 12.17 மணிக்கு நின்று இருகூர் வழியாக செல்லும். எர்ணாகுளத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு பெங்களூருக்கு புறப்பட்டு செல்லும் ரயில்(12678) கோவை ரயில் நிலையத்திற்கு வராது.
அதற்கு பதிலாக போத்தனூர் ரயில் நிலையத்தில் பகல் 12.47 மணிக்கு நின்று இருகூர் வழியாக செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




