கோவை: தங்களது நீண்ட கால கோரிக்கையை முதல்வர் கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டு செல்லவில்லை என்று பொதுமக்கள் மாநகராட்சி மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவை ஒண்டிபுதூர் சூர்யா நகர் ரயில்வே தண்டவாளத்தை கடப்பதற்கு மேம்பாலம் கட்டுவதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மண் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு அதற்கான அரசு ஆணை சில மக்களின் எதிர்ப்புகளால் ரத்து செய்யப்பட்டது.
அதனை அடுத்து மீதமுள்ள மக்கள் தங்களுக்கு மேம்பாலம் கட்ட தர வேண்டுமென வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். முதல்வர், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் என பலரிடமும் மனு அளித்திருந்தனர்.
ஆனால் தற்பொழுது வரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்பொழுது தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாவது தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கையுடன் சீர்வரிசைகளுடனும், கோரிக்கை பதாகைகளை ஏந்தியும் அப்பகுதி மக்கள் ஊர்வலமாக சென்று மனு அளித்தனர்.
ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு அளிக்க சென்ற போது மாநகராட்சி மேயர் ரங்கநாயகியிடம் அவர்களது கோரிக்கையை எடுத்துரைத்தனர். அப்போது சிலர் தங்களது இந்த கோரிக்கையை முதல்வர் கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டு செல்லவில்லை என்று ஆவேசம் கொண்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மேயர் உங்களது கோரிக்கை நிச்சயமாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் கூடிய விரைவில் இது தொடர்பாக கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். அதனை அடுத்து அனைவரும் மனு அளித்தனர்.
இது குறித்து பேசிய அப்பகுதி குடியிருப்போர் நல சங்க உறுப்பினர் தெய்வேந்திரன், பல ஆண்டுகளாக எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருவதாகவும் இந்த முகாமிலாவது தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையுடன் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் மாநகராட்சி நிர்வாகம் மேம்பாலம் கட்டுவது தொடர்பாக தீர்மானத்தை அறிவிக்க வேண்டும் என கூறிய அவர் இனிமேலும் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டங்களுக்கு முன்னெடுப்போம் என்று கூறினார்.




