கோவை: தீபாவளி ஷாப்பிங் வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி செல்ல போலீசார் இலவச பார்க்கிங் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் 10 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
கோவை மாநகரில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு, பொதுமக்கள் புதிய ஆடைகள் மற்றும் இதர பொருட்களை வாங்கும் பொருட்டு கோவை ஒப்பணக்கார வீதி, பெரிய கடைவீதி மற்றும் காந்திபுரம் கிராஸ்கட் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள துணிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கு அதிகளவில் வாகனங்களில் வருகின்றனர்.
இவ்வாறு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை ஒப்பணக்கார வீதி மற்றும் கிராஸ்கட் ரோடு பகுதிகளுக்குள் நிறுத்தி விடுகின்றனர். இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு கோவை மாநகர போலீசார் இலவச பார்க்கிங் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் திருட்டை தடுக்க 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்துள்ளனர்.
இதுகுறித்து கோவை மாநகர போலீசார் கூறியதாவது:

தீபாவளி பண்டிகையையொட்டி கடை வீதிகளில் நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். கூட்டத்தை பயன்படுத்தி பொதுமக்களிடம் ஜேப்படி செய்யும் நபர்களை கண்டு பிடிக்க டவுன்ஹால், 8ம் நம்பர் ஜங்சன், ஒப்பணக்கார வீதி, போத்தீஸ் கார்னர், லாலா கார்னர் உட்பட 5 இடங்களிலும், காந்திபுரத்தில் கணபதி சில்கஸ் பகுதி, 8ம் நம்பர் மார்ககெட், காட்டூர் போலீஸ் நிலையம் எதிரே, மத்திய பஸ் நிலையம் உட்பட 5 இடங்களிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அதேபோல தீபாவளி ஷாப்பிங் வரும் பொதுமக்களுக்கு தங்களது வாகனங்களை நிறுத்த இலவச பார்க்கிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ராஜவீதி மாநகராட்சி துணி வணிகர் பள்ளி, வெரைட்டி ஹால் ரோடு கால் நடை மருத்துவமனை அருகே உள்ள சிஎஸ்ஐ பள்ளி, ஒப்பணக்கார வீதி மாநகராட்சி மகளிர் பள்ளி, பெரியகடை வீதியில் உள்ள மைக்கேல் பள்ளி
காந்திபுரம் 9வது வீதி, வடகோவை மாநகரட்சி பள்ளி, கிராஸ்கட் ரோடு 8ம் நம்பர் மார்க்கெட் மாநகராட்சி பள்ளி, சிங்காநல்லூர் உழவர் சந்தை உள்ளிட்ட இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.





