கோவை: காந்திபுரத்தில் தள்ளு வண்டிக்காரரிடம் கத்தியைக் காட்டிமிரட்டி பணம் பறித்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜா. இவர் கோவை சித்தாப்புதூரில் தங்கி, காந்திபுரத்தில் தள்ளு வண்டியில் நிலக்கடலை வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் ராஜா, வழக்கமாக தள்ளு வண்டியை வெயிலில் நிறுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு மது போதையில் வந்த வாலிபர் ஒருவர் ராஜாவிடம் மது குடிக்க பணம் கேட்டார்.
அதற்கு ராஜா, தன்னிடம் பணம் இல்லை என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி ராஜாவின் பாக்கெட்டில் இருந்த ரூ.360 ஐ பறித்து தப்பி சென்றார்.
இதுகுறித்து ராஜா புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில் பணம் பறித்தது பல்லடம் வடக்கிப்பாளையத்தை சேர்ந்த முரளி (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.