Advertisement

கோவையில் மருதமலை அருகே இறந்த பெண் யானையின் வயிற்றில் 15 மாத ஆண் குட்டியானை இருந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது…
கோவை, மருதமலை அடிவாரத்தில் கடந்த நான்கு நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் காட்டு யானை நேற்று மாலை உயிரிழந்தது.
Advertisement

இந்நிலையில் இன்று யானையின் பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. அதில் பெண்யானையின் வயிற்றில் 15 மாத கருவுடன், பிளாஸ்டிக் கழிவுகளும் புழுக்களும் இருந்துள்ளது.
கடந்த மே 17 – ம் தேதி பாரதியார் பல்கலைக் கழகத்தின் மேற்குப் பகுதியில், தனது குட்டியுடன் மயங்கி விழுந்த தாய் யானைக்கு வனத் துறையினர் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். கும்கி யானையின் உதவியுடன் கிரேன் மூலம் பெல்ட்டால் தூக்கி நிறுத்தப்பட்டு, தற்காலிக தொட்டியில் நீர் நிரப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது. வனக் கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன், சதாசிவம், சுகுமார், மேகமலை புலிகள் காப்பக மருத்துவர் கலைவாணன் மற்றும் மருத்துவர் முத்துராமலிங்கம் ஆகியோர் சிகிச்சையை மேற்பார்வையிட்டனர்.
ஆனாலும், சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது. அதன் உடற்கூறு ஆய்வில், யானையின் வயிற்றில் 15 மாத வளர்ச்சி அடைந்த குட்டி இருந்ததும், அத்துடன் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகளும், புழுக்களும் இருந்ததும் கண்டறியப்பட்டு உள்ளது.
கருவுற்றிருந்த யானைக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படாமல் போனது வனத் துறையினரின் அலட்சியத்தையே காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
பிளாஸ்டிக் கழிவுகள் யானையின் வயிற்றில் இருந்து இருப்பது, வனப் பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகரித்து வருவதையும், வன விலங்குகளின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதையும் எடுத்துக்காட்டுகிறது என வன ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.