கோவை: மருதமலை அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பெண் காட்டு யானை உயிரிழந்தது…
கோவை மருதமலை அருகே பெண் காட்டுயானை ஒன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு நடமாட முடியாமல் கிடந்தது கண்டறியப்பட்டது. அதனுடன் ஒரு குட்டியானையும் இருந்தது. பின்னர் வனத்துறையினர் மற்றும் மருத்துவர்கள் அந்த குட்டியானையை வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்து விட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் காட்டுயானைக்கு நான்கு நாட்களாக கும்கியானையின் உதவியுடன் சிகிச்சை அளித்து வந்தனர். குளுக்கோஸ், பழச்சாறு ஆகியவற்றுடன் சத்து மாத்திரைகளை கொடுத்தும் ஊசி மூலம் மருந்துகளை செலுத்தியும் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று Hydro Therapy என்ற நீரில் இறக்கி சிகிச்சை அளிக்கும் முறையை கையாண்டனர். நீரில் அந்த பெண் யானையை இறக்கி நீரை ஊற்றி சிகிச்சை அளித்த நிலையில் மீண்டும் யானையை நீரில் இருந்து வெளியே எடுக்கும் போது உயிரிழந்தது.
நாளை பிரேத பரிசோதனை நடைபெறும் என்றும் பிரேத பரிசோதனையில் யானை உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.