கோவை: கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குத்துச்சண்டை பொட்டியை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
இளைய தலைமுறையினருக்கு குத்துச்சண்டை மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக கோவையில் செயல்பட்டு வரும் எஃப்7 ஹப் அமைப்பு சார்பில் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி ஆர்.எஸ்.பிரம் பகுதியில் நடைபெற்றது.இந்த போட்டியில் தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா,மிசோரம்,ஹரியானா,சண்டிகர் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 14 வீரர் மற்றும் 2 வீராங்கணைகள் பங்கேற்றனர்.
முன்னதாக நடைபெற்ற பெண்களுக்கான போட்டியில் சென்னையை சேர்ந்த கனிஷ்கா மற்றும் சண்டிகரை சேர்ந்த ரமன்தீப் கவுர் மோதினர்.ஆறு சுற்றுகளுடன் மிகவும் விருவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் மூன்று சுற்றுகளில் சென்னையை சேர்ந்த கனிஷ்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் கடைசி இரண்டு சுற்றுகளில் சண்டிகரை சேர்ந்த ரமன்தீப் கவுர் சிறந்த தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்த குத்துகளை கொடுத்து போட்டியில் வெற்றி பெற்றார்.
இதேபோல் ஆண்களுக்கான போட்டியில் ஷர்வன் ரஞ்சித் தாஸ் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் மோதிய நிலையில் துவக்கம் முதலே மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் ஒருவருக்கொருவர் கடுமையாக மோதிக்கொண்டனர். இறுதியில் ஷர்வன் ரஞ்சித் தாஸ் நாக் அவுட் முறையில் வெற்றி பெற்றார். இதேபோல் தேசிய அளவில் சிறந்த வீரர்களான முகம்மது இர்ஃபான்,அசத் ஆசிஃப் கான்,மொஹம்மத் ஷமீம் உள்ளிட்ட பலர் போட்டியில் பங்கேற்று தங்களது சிறப்பான குத்துசண்டையினால் பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.
தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கேடயம் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. கடந்த 2023 ஆம் ஆண்டு இதேபோல் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி கோவையில் நடைபெற்ற நிலையில் இரண்டாவது முறையாக தற்போது நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் கோவை எஃப்7 ஹப் அமைப்பு சார்பில் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு இலவசமாக குத்துச்சண்டை பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் ஒலிம்பிக் போட்டியில் தற்போது இந்தியா சார்பில் குத்துச்சண்டை போட்டிகளில் வீரர் வீராங்கணைகள் பங்கேற்று சாதனை படைத்து வரும் சூழலில் தமிழகத்தில் இருந்தும் சிறந்த வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவ்வமைப்பின் நிறுவனர் ரயான் தெரிவித்துள்ளார்.