கோவை: வாங்கிய பட்டாசுக்கு பணம் கேட்ட ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய வாலிபர்கள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பெருமாள் சந்து பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன் (42). ஆட்டோ டிரைவர். இவரது உறவினர் தீபாவளியையொட்டி ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் பட்டாசு கடை திறந்திருந்தார்.
அங்கு வாசுதேவன் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் தீபாவளி அன்று ஒருவர் கடைக்கு வந்து 1000 ரூபாய்க்கு பட்டாசு வாங்கி ரூ.650 கொடுத்துள்ளார். அப்போது வாசுதேவன் மீதி பணத்தை கேட்டுள்ளார்.
அதனால் அந்த நபர் பட்டாசை கொடுத்து விட்டு கடையில் இருந்து சென்றார். சிறுது நேரம் கழித்து அந்த நபர் தனது நண்பர்கள் 2 பேரை கடைக்கு அழைத்து வந்து வாசுதேவனிடம் தகராறில் ஈடுபட்டார்.
அதற்கு வாசுதேவன் தகராறில் ஈடுபடாமல் கடையில் இருந்து செல்லும்படி தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் சேர்ந்து வாசுதேவனை சரமாரியாக தாக்கினர்.
அதில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வாசுதேவனின் கைகளில் குத்தினார். வலியால் அலறி துடித்த அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அவர்கள் வருவதை பார்த்து அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் பலத்த காயம் அடைந்திருந்த வாசுதேவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து வாசுதேவன் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதில் வாசுதேவனை கத்தியால் குத்தியது ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோடு சுப்பிரமணியர் கோயில் வீதியை சேர்ந்த வினோத் (22), தனுஷ் (20), அருண்குமார் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.



