கோவை: சரவணம்பட்டியில் பூங்கா நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட சரவணம்பட்டி மீனாட்சி நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு பூங்கா நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சரவணம்பட்டி பகுதியில் கடந்த 1993ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மீனாட்சி நகர் மனைப்பிரிவில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 50 சென்ட் நிலம் பூங்காவாக ஒதுக்கப்பட்டது.
அந்த நிலம் 1993ம் ஆண்டு தானப்பத்திரம் மூலம் சரவணம்பட்டி பேரூராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த பூங்கா நிலத்தில் சுமார் 13 சென்ட் நிலத்தை சிவஞானம் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து மதில்சுவர் கட்டி ஆக்கிரமித்துள்ளார்.
இதுகுறித்து 2021ம் ஆண்டு கோவை மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஆனால், அந்த நோட்டீஸை எதிர்த்து சிவஞானம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், கடந்த19ம் தேதி வழக்கை தள்ளுபடி செய்து, ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு வழங்கியுள்ளது.
இதையடுத்து 13 சென்ட் இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் விரைவில் மதில் சுவரை இடித்து கையகப்படுத்தி, மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் வேலி போட்டு பாதுகாத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

