கோவையில் ஐ.டி., நிறுவனத்தில் புகுந்து திருடிய டிப்-டாப் ஆசாமி!

கோவை: கோவையில் ஐ.டி நிறுவன உரிமையாளரைப் பார்க்க வருவது போல் நடித்து, லேப்டாப்களைத் திருடிச் சென்ற டிப்-டாப் ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார்(34). இவர் அதே பகுதியில் ஐ.டி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

நேற்று அந்த நிறுவனத்திற்கு டிப்-டாப்பாக வந்த ஆசாமி, அங்கு பணியில் இருந்த பெண்ணிடம் உங்கள் உரிமையாளரைச் சந்திக்க வேண்டும் என்று கூறினார். விவரங்களைக் கேட்ட்ட அந்த பெண் ஊழியர் சிறிது நேரம் காத்திருங்கள், வந்து விடுவார் என்று கூறிவிட்டு அலுவலக பணியை கவனித்துள்ளார்.

அந்நேரத்தில் டிப்-டாப் ஆசாமி தனது பேக்கை எடுத்து கொண்டு அடிக்கடி வெளியே சென்று வந்துள்ளார். ஒவ்வொரு முறை செல்லும்போது, நிறுவனத்தில் இருந்த லேப்டாப்பை தனது பேக்கிற்குள் மறைத்து எடுத்து சென்று வெளியே பைக்கில் காத்திருந்த தனது கூட்டாளியிடம் கொடுத்து விட்டு வந்துள்ளார்.

இதேபோல், அவர் 8 லேப்டாப்பை திருடியுள்ளார். பின்னர் அந்த ஆசாமி பிறகு வருவதாக தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். சிறிது நேரம் கழித்துதான் நிறுவனத்தில் இருந்தவர்களுக்கு டிப்-டாப் ஆசாமி லேப்டாப்களை திருடி சென்றது தெரியவந்தது.

உடனே இது குறித்து உரிமையாளர் ராஜேஷ்குமாரிடம் தெரிவித்தனர். அவர் ஆர்.எஸ்.புரம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து லேப்டாப் திருடிய டிப்-டாப் ஆசாமியைத் தேடி வருகின்றனர்.

Recent News

Latest Articles