கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு பிறகு பெண் உயிரிழந்த நிலையில் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து 5 நாட்களாக உடலை வாங்காத உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாநகர் அம்மன்குளம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர்கள் அண்ணாதுரை- சங்கீதா தம்பதியினர். இவர்கள் 9 ஆண்டுகளுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்து அப்போதே குடும்ப கட்டுப்பாடும் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 9 ஆண்டுகள் கழித்து சசங்கீதா மீண்டும் கர்ப்பமாகியுள்ளார் . இந்நிலையில் தாய் மற்றும் சேய் மிகவும் சிக்கலான நிலையில் இருப்பதாகவும் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்கவில்லை என்றால் இருவரும் உயிருக்கும் ஆபத்து என மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது.
அறுவை சிகிச்சை செய்து 6 மாத குழந்தையை வெளியே எடுத்த போதே இறந்து விட்டது. இதனை அடுத்து 3 நாட்களுக்கு பிறகு வழக்கமான மருத்துவ சோதனைக்கு பிறகு சங்கீதாவுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் நிலை இருந்ததாக தெரிகிறது. அப்போது அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் உடல்நிலை மோசமாகியது. பின்னர் கடந்த 31 ஆம் தேதி சங்கீதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மருத்துவர்களின் தவறான சிகிச்சையும் தையல் போடப்பட்ட இடங்களில் இருந்து மலக்கழிவுகள் வெளியே வரும் அளவிற்கு மோசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தையல் போடப்பட்டது தான் காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டினர். மேலும் உரிய நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி கடந்த 31ஆம் தேதி முதல் உடலை பெறவில்லை.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளித்ததாகவும் அவருக்கு இருந்த உயர் ரத்த அழுத்தம் காரணமாகவே ஆறு மாதத்திலேயே அறுவை சிகிச்சை செய்து குழந்தை வெளியே எடுக்கும் நிலை ஏற்பட்டதாகவும் கூறினர். மேலும் மிக சொற்பமான அளவிலேயே குடும்ப கட்டுப்பாடு செய்த பிறகும் கருத்தரிக்கும் நிலை ஏற்படும் எனவும் அதற்கு உரிய இழப்பீடுகள் வழங்கும் நடைமுறை உள்ளது எனவும் கூறினர்.
இந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் எந்த ஒரு பொறுப்பான பதிலும் அளிக்கவில்லை எனவே 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கூறி உறவினர்கள் திராவிட தமிழர் கட்சியினருடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என குடும்பத்தினரை உள்ளே அழைத்துச் சென்றதை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

