கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு 2025-26 மாணவர் சேர்க்கை துவங்க உள்ளது.
கோவையில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம் வாயிலாக 34 துறைகளில் முதுகலைப் படிப்பையும் மற்றும் 29 துறைகளில் முனைவர் பட்டபடிப்பையும் வழங்குகிறது.
2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை செயல்முறை 10.10.2025 அன்று முதல் தொடங்குகிறது.
இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் இவ்வாண்டு மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் (https://admissionsatpgschool.tnau.ac.in/) மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இணைய வழியாக முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புக்கு 10.11.2025 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள், மத்திய வேளாண் பல்கலைக்கழகங்கள், ICAR கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் வேளாண் கல்லூரிகளில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வனவியல், பட்டு வளர்ப்பு மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றில் இளங்கலை, முதுகலைப் படிப்பை ஏற்கனவே முடித்த மாணவர்கள், தகவல் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தேவையான ஆவணங்களைப் பதிவேற்றுவதன் மூலம் முனைவர் மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தற்பொழுது இறுதியாண்டு இறுதி பருவம் பயிலும் மாணவர்கள் முந்தைய பருவ மதிப்பெண் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர் சேர்க்கை தொடர்பான ஐயப்பாடுகளுக்கு pgadmission@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்அஞ்சல் அனுப்பலாம். நேரடியாக தொடர்பு கொள்ள 94890 56710 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் லிங்க்: https://admissionsatpgschool.tnau.ac.in/




