கோவை: அதிமுக உட்கட்சி குழப்பங்களுக்கு பாஜக தான் காரணம் எனும் விமர்சனத்திற்கு பதில் அளித்த அவர், பழுத்த மரம் தான் கல்லடி படும் எனவும், மற்ற கட்சிகளின் விவகாரங்களில் யாரும் தலையிட முடியாது என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு நடவடிக்கையின் நன்மைகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார்.
அப்போது பேசிய அவர், ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கையால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் மருந்துகள், வீட்டு உபயோகப் பொருட்களின் விலை குறைய உள்ளதாகவும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் கருவிகளின் விலை குறையும் எனவும், இதனால் நுகர்வு சதவீதம் அதிகரிப்பதோடு நாட்டின் உற்பத்தி அதிகரித்து இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு தீபாவளி பண்டிகை பரிசாக ஜிஎஸ்டி வரி 28 மற்றும் 12 சதவீதம் நீக்கப்பட்டு, 5 மற்றும் 18 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர ஏழை எளிய மக்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பெரிதும் பயனடைவார்கள். சிகரெட் புகையிலை பொருட்கள் ஆகியவற்றின் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கோயம்புத்தூர் போன்ற உற்பத்தி தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியில் இரண்டு விதமான வரி விதிப்பு முறை இருந்தது. இப்போது அதை சரி செய்யப்பட்டு உள்ளது. இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கையால் விலை குறைந்து பொதுமக்கள் பயனடைய வேண்டும் என்பதே குறிக்கோளாகும்.
ஜி எஸ் டி வரிக்குறைப்பு நடவடிக்கையால் மாநில வருவாய் பாதிக்கப்படுவதாக தமிழக நிதி அமைச்சர் கூறும் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜிஎஸ்டி அறிமுகம் செய்த போதும் இதே கருத்தை தான் கூறினர். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் பொருட்களின் விலை குறையும் நுகர்வு சதவீதம் அதிகமாகும் இதனால் உற்பத்தி அதிகரிப்பதோடு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இதனால் மாநிலத்தின் பொருளாதாரம் அதிகரிக்கும்.
ஜிஎஸ்டி அறிமுகம் செய்த போது இருந்த வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துள்ளது. அதேபோல் ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கையால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும்.
இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒரு கோரிக்கை முன்வைக்கிறோம், மத்திய அரசு ஜிஎஸ்டி வரி சதவீதத்தை குறைத்தாலும் அதனை வசூலிப்பது மாநில அரசுதான். இதனை முறையாக அமல்படுத்தி பொருட்களின் விலை குறைவதை கண்காணிக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பாகும். மாநில வணிகவரித்துறை அதிகாரிகள் இவற்றை கண்காணிக்க வேண்டும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கையால் மக்களின் சுமை நீங்கும். குறிப்பாக பல்வேறு மருந்துகளின் விலை குறையும், டிராக்டர் உள்ளிட்ட வேளாண் கருவிகளின் விலை குறையும். தவறான கருத்துக்களை கூறி இந்த நடவடிக்கைக்கு எதிராக மலிவான அரசியலை செய்ய வேண்டாம்.
தமிழ்நாடு சிறந்த உற்பத்தி திறன் கொண்ட மாநிலம் ஆகும். இதற்கு அடிப்படை காரணம் உட்கட்டமைப்பு மேம்பாடு தான். தூத்துக்குடி சிறந்த தொழில் நகரமாக விளங்குவதாக தமிழக முதல்வர் கூறுகிறார். அதற்கு காரணம் மத்திய அரசு தூத்துக்குடியில் துறைமுகத்தை விரிவாக்கப்படுத்தியதுதான். எனவே தமிழகம் முதல் இடத்தில் விளங்குவதற்கு இருப்பதற்கு காரணம் மத்திய அரசுதான்.
தமிழக முதல்வர் வெளிநாடுகளுக்கு சென்று தொழில் முதலீடுகளை கொண்டு வருவதாக கூறுகிறார். ஆனால் இதே போல் முன்பும் கூறி எந்த பலனும் கிடைக்கவில்லை. செமி கண்டக்டர் துறை மேம்பாட்டிற்காக மத்திய அரசு மானியங்களை அறிவித்து குஜராத், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் செமி கண்டக்டர் உற்பத்தி ஆலைகளை துவங்கியுள்ளன. ஆனால் தமிழகம் செய்யவில்லை. தமிழகத்தில் புதிய தொழில் துவங்குவதற்கு பயப்படுகின்றனர்’ என நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.
மேலும், கோவை மாநகரில் கட்டப்பட்டு முடிவுற்ற அவிநாசி மேம்பாலம் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்காமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, திமுக ஆட்சியில் கோவையில் சாலைகள் சரியாக போடப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை மத்திய அரசு வழங்க மறுப்பதாக கூறும் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த நாராயணன் திருப்பதி, மத்திய அரசு அனைத்து மாநிலங்களின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
அதிமுக உட்கட்சி குழப்பங்களுக்கு பாஜக தான் காரணம் எனும் விமர்சனத்திற்கு பதில் அளித்தவர், பழுத்த மரம் தான் கல்லடி படும் எனவும், மற்ற கட்சிகளின் விவகாரங்களில் யாரும் தலையிட முடியாது எனவும் தெரிவித்தார்.