இந்தப் பதிவில் கற்றாழையின் பயன்களையும், எப்படி பயன்படுத்தக் கூடாது என்ற டிப்ஸையும் காணலாம்.
பொதுவாக கற்றாழை பல்வேறு அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. தடிமனான, முனை கூர்மையான, சதைப்பற்றுள்ள பச்சை நிற இலைகளுடன் பிசுபிசுப்பான திசு கற்றாழையில் உள்ளது. இதுவே அலோவேரா தயாரிப்புகளில் காணப்படும் ஜெல். இந்த ஜெலில் வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் போன்ற பல்வேறு பயனுள்ள உயிர்ச்செயலுள்ள சேர்மங்கள் உள்ளன.

ஆன்டிபாக்டீரியல் தன்மை
கற்றாழையில் பாக்டீரியா, வைரஸ் மற்றும் கிருமி எதிர்க்கும் தன்மைகள் உள்ளன. ஆகையால் இது காயங்களை விரைவாக ஆறச் செய்யவும் மற்றும் தோல் பிரச்சனைகளைச் சரிசெய்யவும் உதவுகிறது. அலோவேரா பாக்டீரியாக்கள் வளர்ச்சியைத் தடுக்கிறது. குறிப்பாக Staphylococcus aureus மற்றும் Pseudomonas aeruginosa போன்ற பாக்டீரியாக்கள் மீது இதன் தாக்கம் அதிகமாக உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த பாக்டீரியாக்கள் குறிப்பாக புண்கள் மீது அதிக தாக்கம் ஏற்படுத்தக் கூடியது.
காயங்கள் விரைவாக ஆறும்
கற்றாழை பெரும்பாலும் வெளிப்புற மருந்தாகவே பயன்படுத்தப்படுகிறது. இது முதல் மற்றும் இரண்டாம் நிலை தீக்காய்களுக்கு ஒரு சிறந்த வெளிப்புற மருந்தாக செயல்படுகிறது. வழக்கமான மருந்துகளுடன் ஒப்பிடுகையில், கற்றாழை தீக்காயங்களை குணப்படுத்தும் காலத்தை சுமார் 9 நாட்கள் வரை குறைக்க உதவுகிறது. மேலும், அரிப்பு மற்றும் தொற்றுகளைத் தடுப்பதிலும் இது உதவுகிறது. மற்ற வகை காயங்களில் பெரிதாக இதன் பயன் குறித்து உறுதியான முடிவுகள் இல்லையென்றாலும், சில ஆய்வுகள் நம்பிக்கை அளிக்கின்றன.

பற்கள் நலம்
பல் அழுகல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் தொற்றுக்களைக் குறைக்க கற்றாழை உதவுகிறது. இது முதலில் பற்களில் சேரும் பாக்டீரியா படலத்தைக் குறைக்கின்றது. 8 முதல் 14 வயதுடைய பள்ளி மாணவர்களைக் கொண்டு செய்யப்பட்ட ஒரு ஆய்வில், அலோவேரா மவுத் வாஷ் மற்றும் குளோர்ஹெக்சிடின் கொண்ட சாதாரண மவுத்வாஷ் ஆகியவற்றின் விளைவுகள் ஒப்பீடு செய்யப்பட்டன. நான்கு வாரங்கள் பயன்படுத்திய பின்னர், அலோவேரா மவுத் வாஷ் பிளேக் (plaque), ஈறு அழற்சி மற்றும் Streptococcus mutans எனப்படும் பிளேக் உருவாக்கும் பாக்டீரியாவை கணிசமாகக் குறைத்தது. கடந்த 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அலோவேரா மவுத் வாஷ் ரசாயன மவுத் வாஷ்களுக்கு இயற்கையான மாற்றாக செயல்பட முடியும் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அலோவேரா ஜெல் வாயில் காணப்படும் Candida albicans எனும் ஈஸ்ட் வகை கிருமியை அழிக்கவும் உதவுகிறது.

வாய்ப்புண் குணமாக
சிலருக்கு அடிக்கடி வாய்ப்புண்கள் ஏற்படுவதுண்டு. இவை பெரும்பாலும் உதட்டின் உட்புறத்தில் உருவாகி சுமார் ஒரு வாரம் வரை நீடிக்கும். கடந்த 2022ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், கற்றாழை வேகமாக வாய்ப்புண்களை குணப்படுத்துவது உறுதியாகியுள்ளது. மேலும், 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மருத்துவ ஆய்வில், கதிர்வீச்சு சிகிச்சையால் ஏற்படும் வாய்ப்புண் மற்றும் அழற்சியின் தீவிரத்தை அலோவேரா மவுத் வாஷ் குறைக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அண்டி-ஏஜிங்
அலோவேரா ஜெல்லை நாம் வெளிப்புறமாக பயன்படுத்தும்போது முதுமையை மெதுவாக்குவது மட்டுமின்றி, தோல் பாதுகாப்பு, ஈரப்பதம், நெகிழ்ச்சி மற்றும் கொலாஜன் அளவு ஆகியவை மேம்படுகிறது.

சர்க்கரை கட்டுப்பாடு
சர்க்கரை நோய்க்கு கற்றாழையை சிலர் மருந்தாக பயன்படுத்துகின்றனர். இது இன்சுலின் செயல்திறனை மேம்படுத்தி, ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது என்று கூறப்பட்ட நிலையில், ஆய்வு முடிவுகள் இதனை முழுமையாக உறுதிப்படுத்தவில்லை. இதனால், சர்க்கரை நோய்க்கான சிகிச்சையாக கற்றாழையை பரிந்துரைக்க மருத்துவர்கள் முன்வரவில்லை.
பயன்படுத்தும் முறைகள்
கற்றாழையை வெளிப்புறமாகப் பயன்படுத்தும் போது எந்த பாதிப்பும் இல்லை. அதே நேரத்தில், அதனை உட்கொள்ளும் போது மிகவும் கவனமாக இருத்தல் அவசியம். கற்றாழையை உட்கொள்ளும் முன் 7 முறை கழுவ வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஏனென்றால், கற்றாழையின் மேற்பகுதியில் உள்ள மஞ்சள் படலம் பாதுகாப்பற்றது. இதனாலேயே இதனை நன்கு கழுவிப் பயன்படுத்துவது அவசியமாகும். இல்லையெனில் வயிற்று வலி அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படலாம். சில நேரங்களில் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
கற்றாழையை வெளிப்புறமாகத் தயக்கமின்றி பயன்படுத்தலாம் என்ற அதே நேரத்தில், அதனை நீங்கள் மருந்தாக உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

