செந்தில் பாலாஜி எனக்கு சாதாரணம்… அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் பிரத்யேக பேட்டி

கோவை: செந்தில் பாலாஜியை தான் பெரிய அளவில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும், இந்த தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்றும் News Clouds Coimbatore-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் உறுதி தெரிவித்துள்ளார்.

கோவை தெற்குத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனனும் களம் காண்பதால் அந்தத் தொகுதி விவிஐபி தொகுதியாகி உள்ளது. இதனிடையே, அரசியல் போட்டி, வருங்கால திட்டங்கள் குறித்து அம்மன் அர்ஜுனனிடம் நமது செய்திக்குழுவினர் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:-

செந்தில் பாலாஜி எனக்கு ஒரு போட்டியாளர் தான். என்னுடன் போட்டியிடும் ஆறு பேரில் அவரும் ஒருவர் மட்டுமே. அவரை நான் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. செந்தில் பாலாஜி ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்கிறார். தேர்தல் முடிவுகள் அவருக்கு தக்க பதிலடி கொடுக்கும். எந்தவித சந்தேகமும் இல்லாமல், நான் செந்தில் பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். கோவையைப் பொறுத்தவரை கடந்த 15 ஆண்டுகளாக அதிமுகதான் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று வருகிறது. இந்த முறையும் அதிமுக வெற்றி பெறும். நாங்கள் கோவையில் சும்மா வெற்றி பெறவில்லை. பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அதிமுக அரசு கோவைக்கு கொண்டு வந்துள்ளோம். அதனால்தான் மக்களிடம் எங்களுக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது.

தமிழ்நாட்டிலேயே மிக நீளமான மேம்பாலமான அவிநாசி சாலை மேம்பாலத் திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக ஆட்சி தான். கடந்த 10 ஆண்டுகளில், பல தசாப்தங்களாக திமுகவால் செய்ய முடியாத பல திட்டங்களை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சரான எஸ்.பி. வேலுமணி ஆகியோரின் தலைமையில் கோவைக்கு கொண்டு வந்தோம். ஜி.டி. நாயுடு மேம்பாலம் மட்டுமல்லாமல், உக்கடம் மேம்பாலம், என்.ஜி.ஓ. காலனி மேம்பாலம், பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம் உள்ளிட்ட பல முக்கியமான மேம்பாலங்கள் அனைத்தும் அதிமுக ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டன.

பொள்ளாச்சி முதல் கோயம்புத்தூர் வரை கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டதும் அதிமுக ஆட்சியில்தான். ரூ.1,500 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டு வந்ததும் அதிமுக அரசு தான். அதன் மூலம் கோவை நகரின் முகம் மாறியது. திமுக அரசு கோவைக்கு பிரத்தியேகமாக கொண்டு வந்த ஒரு பெரிய திட்டத்தை சொல்லட்டும். கருணாநிதி ஆட்சியில் அவர் கண்ட கனவாக செம்மொழிப் பூங்கா கோவைக்கு வந்தது உண்மை. ஆனால் தற்போது அந்தப் பூங்காவுக்கு உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் இல்லை. குறுகிய காலத்திலேயே அது மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கோவையின் அடையாளங்களில் ஒன்றான வ.உ.சி. பூங்காவை மூடி வைத்திருப்பது தான் திமுகவின் திட்டமா?

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட குளங்கள் மற்றும் நகர்ப்புற வசதிகள் தற்போது பராமரிப்பின்றி கிடக்கின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார். கோவை மக்களை திமுக அரசு முழுமையாக புறக்கணித்து விட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கோவைக்காக எந்தப் பெரிய திட்டமும் கொண்டு வரப்படவில்லை. அதனால் மக்கள் திமுகவை கண்டிப்பாக நிராகரிப்பார்கள். செந்தில் பாலாஜியின் சொந்த ஊர் கரூர் தான். அங்கேயே அவர் போட்டியிடவில்லை. கரூரில் எம்.ஆர். விஜயபாஸ்கர் மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி மக்கள் மனதை வென்றுவிட்டார். அங்கு நின்றால் தோல்வி அடைவோம் என்ற பயத்தில்தான் செந்தில் பாலாஜி கோவைக்கு வந்துள்ளார்.

amman arjunan admk

எங்கள் வாக்கில் ஒரு சதவீதம் கூட யாராலும் குறைக்க முடியாது. அதிமுகவின் ஓட்டுகள் சிதறாது. திமுக ஆட்சியில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துவிட்டது. அதனால் சமூக சீர்கேடுகள் அதிகரித்துள்ளன. கோவைக்கு திமுக கொண்டு வந்த திட்டம் என்றால் டாஸ்மாக் கடைகள்தான். போதைப் பழக்கம் அதிகரித்ததால் பாலியல் தொல்லைகள் உள்ளிட்ட சமூக பிரச்சினைகளும் அதிகரித்துள்ளன. இந்த நிலை மாற வேண்டுமென்றால் அதிமுக ஆட்சிதான் மீண்டும் வர வேண்டும்.

பணத்தாலும், பிரியாணியாலும் மக்களின் வாக்குகளை வாங்க முடியாது. கோவை மக்கள் மாற்றத்தைக் காத்திருக்கிறார்கள். கோவை மக்கள் அதிமுக ஆட்சியை உற்சாகத்துடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஜனநாயக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். அதிமுக வேட்பாளர்கள் திறந்த புத்தகம் போன்றவர்கள்; அவர்களுக்கு எந்தவித களங்கமும் இல்லை.

கடந்த 70 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அத்திக்கடவு-அவிநாசி திட்டம் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் செயல்பாட்டுக்கு வந்தது. திமுக ஆட்சியில் அம்மா கிளினிக், அம்மா உணவகம் போன்ற மக்கள் நலத் திட்டங்கள் மூடப்பட்டன. தஞ்சாவூர், மன்னார்குடி, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததும் எடப்பாடி ஆட்சிதான்.

நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற திமுகவின் வாக்குறுதி நிறைவேறவில்லை. அதற்கு பதிலாக அதிமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கிடைத்தது. அதன் பலனாக ஆண்டுதோறும் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவக் கல்வியில் சேர்ந்து மருத்துவர்களாகி வருகிறார்கள். அது அதிமுக அரசின் மிகப் பெரிய சாதனை.

Also Read: திடீரென அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்…

எடப்பாடி பழனிசாமி விவசாயி என்பதால், விவசாயிகளின் கஷ்டங்களை நன்கு புரிந்துகொள்கிறார். அவர் விவசாயிகளை மட்டுமல்ல, மக்களையும் பாதுகாக்கும் தலைவர். தற்போது தொழில் வளங்கள் வெளிமாநிலங்களுக்கு நகர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் எடப்பாடி ஆட்சி வந்தால் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தொழில்களை மீண்டும் தமிழ்நாட்டுக்கும், குறிப்பாக கோவைக்கும் கொண்டு வருவோம்.

amman arjunan admk

கோவை அரசு மருத்துவமனை அதிமுக ஆட்சியில் பெரிய முன்னேற்றம் கண்டது. தனியார் மருத்துவமனைக்கு இணையான தரத்தில் மருத்துவ உபகரணங்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு வாங்கப்பட்டன. கோவை மக்களுக்கு ஏதாவது செய்தால்தான் அவர்கள் நமக்கு வாக்களிப்பார்கள். எதுவும் செய்யாமல் ஓட்டு மட்டும் கேட்பது கோவை மக்களிடம் நடக்காது.

கோவை மக்களுக்காக இன்னொரு பெரிய அரசு மருத்துவமனையை உருவாக்குவோம்,” என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், எஸ்.பி. வேலுமணியின் ஒருங்கிணைப்பிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். கோவை தெற்கில் மட்டுமல்ல, முழு கோவை மாவட்டத்திலும் மக்கள் அதிமுகவுக்கு வலுவான ஆதரவை அளிக்க தயாராக இருக்கிறார்கள்.

இவ்வாறு அம்மன் அர்ஜுனன் கூறினார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவை மாவட்ட எல்லையில் உள்ள மதுபான கடைகள் மூட உத்தரவு- மீறினால் நடவடிக்கை…

கோவை: கோவை மாவட்ட எல்லையில் உள்ள மதுபான கடைகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலத்தில் 2026 ஆம் ஆண்டு கேரள சட்டமன்றப் பொதுத் தேர்தல் 09.04.2026 அன்று நடைபெற உள்ளதால் மக்கள்...

Video

கோவையில் கோழியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு- வனத்துறை மீட்பு…

கோவை: இக்கரை போளூவாம்பட்டியில் விவசாய நிலத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளூவாம்பட்டி பகுதியில், இன்று காலை விவசாயி ஒருவரின் வீட்டின் அருகே புகுந்த மலைப்...