சென்னை: அண்ணாதுரை தான் தமிழ்நாட்டை ஆள்கிறார் என்று, அவரது நினைவுநாளான இன்று முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்த அண்ணாதுரை கடந்த 1969ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி உயிரிழந்தார்.
அவரது ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் இன்றளவில் தமிழக மக்களுக்கு பயனளித்து வருகின்றன. சமீபத்தில் வெளியான பராசக்தி திரைப்படத்தில், “உங்களுக்கு பயம் இருக்கும் வரை இந்த நாட்டை அண்ணாதுரை தான் ஆள்கிறான் என்று பொருள்” என்று அண்ணாதுரை பேசும் வசனங்களை சென்சார் போர்டு நீக்கியிருந்தது.
ஆனால், அந்த வசனம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதனிடையே அதே வசனத்துடன் அண்ணாதுரை நினைவுநாளில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

பேரறிஞர் அண்ணா தமிழர்களின் மனசாட்சி.
நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு.
அண்ணா சாலை, அண்ணா சிலைகள், அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம், அண்ணா பேருந்து நிலையங்கள் என அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே நிறைந்திருக்கும்படி செய்தது கழக அரசு.
மொழித் திணிப்பு – பண்பாட்டுத் திணிப்பு – நிதி நெருக்கடி என்றெல்லாம் வஞ்சகங்களைச் செய்துகொண்டு, துரோகிகளையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும், பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் கெட் அவு தான்.
ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்.
இவ்வாறு ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

