கோவை: ஒன்னிபாளையம், கக்குராயன் மலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20 நாட்களுக்கும் மேலாக சிறுத்தை நடமாட்டம் நீடித்து வருவதாக கூறப்படும் நிலையில், வனத்துறையின் செயல்பாடு குறித்து அண்ணாமலை கடும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகிலுள்ள ஒன்னிபாளையம் மற்றும் கக்குராயன் மலை கிராமங்களைச் சுற்றிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து அச்சம் தெரிவித்து வருகின்றனர். இதனால் கிராம மக்கள் மிகுந்த பதற்றத்தில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு, அப்பகுதியில் நிலவும் சூழ்நிலையை சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த வீடியோ பதிவில், சிறுத்தை நடமாட்டம் குறித்து கிராம மக்களும் வனத்துறையும் ஏற்கனவே உறுதி செய்திருப்பதாகவும், இத்தனை நாட்கள் ஆகியும் விலங்கு இன்னும் பிடிபடாதது மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பகல் நேரத்தில்கூட மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அஞ்சும் சூழல் நிலவுகிறது என தெரிவித்த அண்ணாமலை, பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளதாக சாடியுள்ளார்.
தேர்தல் பணிகளில் அரசு இயந்திரம் முழுவதும் ஈடுபட்டு இருக்கும் சூழலிலும், பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு போன்ற முக்கிய பிரச்சினைகள் புறக்கணிக்கப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழக வனத்துறை உடனடியாக விரைந்து செயல்பட்டு, கேமரா டிராப்கள் மற்றும் தானியங்கி கூண்டுகள் போன்ற நவீன முறைகளை பயன்படுத்தி சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒவ்வொரு நிமிட தாமதமும் அப்பகுதி மக்களின் உயிர் பாதுகாப்புக்கு ஆபத்தாக மாறக்கூடும் என்பதால், தேர்தல் காரணம் கூறி அலட்சியம் காட்டாமல் வனத்துறை அவசரமாக செயல்பட வேண்டும் என அண்ணாமலை தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
கோவை புறநகர் பகுதிகளில் மனிதர் – வனவிலங்கு மோதல் அதிகரித்து வரும் சூழலில், அண்ணாமலையின் இந்த வீடியோ பதிவு தற்போது அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

