கோவை: நாட்டின் தேசிய சின்னமான அசோகர் தூண் நினைவு சிலை கோவையில் திறக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரை விபத்தில்லா நகராக மாற்ற மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் மற்றும் மாநகர காவல் துறையினர் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, மாநகர சிக்னல்களில் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பொது இடங்கள், மேம்பால தூண்களில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஓவியங்களை வரைதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, இந்தியாவிலேயே முதன்முறையாக அசோகர் தூண் நினைவுச் சிலை உக்கடம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
உக்கடம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ரவுண்டானாவில் வைக்கப்பட்டுள்ள இந்த சிலையின் திறப்பு விழாவில் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் கலந்து கொண்டு அசோகர் தூண் நினைவுச் சிலையை திறந்து வைத்தார்.
சிலை திறப்பு விழாவின் ஒரு பகுதியாக கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், அங்கிருந்த பொதுமக்கள் அசோகர் தூண் நினைவுச் சிலையின் அருகில் நின்று செல்பி எடுத்துச் சென்றனர்.
