கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறிய சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை கோவையின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது.
இங்குள்ள 7வது மலையில் உள்ள சுயம்பு லிங்கத்தைத் தரிசிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை வனத்துறை அனுமதி வழங்குகிறது.
இந்தாண்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறி வருகின்றனர். கோவை மட்டுமல்லாது தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

அந்த வகையில், தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்வா என்ற 15 வயது சிறுவன் வெள்ளியங்கிரி மலை ஏறினார். அப்போது சிறுவனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இந்த சோக சம்பவம் சக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.